”மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு புதிய சிலை வைப்போம்”: மகன்கள் சொல்கின்றனர்

சட்டத்தின் அனுமதி பெற்று மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு புதிய சிலை வைப்போம் என, அவரது மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் கூறினர்.

By: Published: August 4, 2017, 12:11:53 PM

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் சிவாஜியின் சிலை அகற்றப்பட்ட நிலையில், மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு புதிய சிலை வைப்போம் என, அவரது மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் கூறினர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மறைந்த நடிகர் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கும் வரை பொதுப்பணித்துறை அச்சிலையை அகற்றாமல் இருந்தனர்.

இந்நிலையில், சிவாஜிக்கு 28,300 சதுர அடியில் 2.8 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவாஜியின் சிலையை அகற்ற பொதுப்பணித்துறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவில் சிவாஜியின் சிலையை அகற்றினர். பகல் நேரத்தில் சிலையை அகற்றினால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால், நள்ளிரவில் அகற்றப்பட்டதாக பொதுப்பணித் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

அகற்றப்பட்ட சிவாஜி சிலை, கட்டப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிலையயை வைப்பதற்கான பீடம் தயாரானவுடன் அதன்மேல் சிலை வைக்கப்படும்.

இந்நிலையில், சிவாஜி சிலை அகற்றம் குறித்து அவரது மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் கூறியிருப்பதாவது, “நாங்கள் அரசையும் நீதிமன்றத்தையும் மதிப்பவர்கள். எங்கள் அப்பா எங்களுக்கு அதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால், சிலை அகற்றம் குறித்து தவறாக எதுவும் சொல்ல மாட்டோம். அரசு மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மதிக்கிறோம்.

என்றாலும், நடிப்புக்கு பெருமை சேர்த்த எங்கள் அப்பாவின் சிலையை, அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட காமராஜரி அருகில் இருக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். அதைத்தான் எங்கள் குடும்பமும் விரும்புகின்றது. சிவாஜி ரசிகர் மன்றம் மற்றும் எங்கள் குடும்பம் சார்பாக, மெரினா கடற்கரையில் காமராஜர் சிலை மற்றும் காந்தி சிலைக்கு நடுவே சிவாஜிக்கு சிலை அமைப்போம். சட்டரீதியாக அனுமதி பெற்று இதனை செய்வோம்.”, என இருவரும் கூறினர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:We will install shivaji statue in marina says shivaji sons

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X