தமிழக அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நாளை மறுநாள் சந்திக்க உள்ளோம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் மூலம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த திமுக எம்எல்ஏ-க்கள், திமுக எம்.பி.,கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பேரவைக் கொறடா விஜயதாரணி ஆகியோர், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நாளை மறுநாள் சந்திக்க உள்ளோம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.,-க்கள் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. வருகிற 31-ம் தேதி (நாளை மறுநாள்) அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குடியரசுத் தலைவரை சந்திக்கும் போது, தமிழக பிரச்னைகள் குறித்து முறையிடப்படும் என்றார்.
குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு அவை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இவ்வளவு காலம் கடந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டது. உரிமைக் குழுவின் நோட்டீஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றார்.