நீட் அவசர சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்போம் : நளினி சிதம்பரம் அறிவிப்பு

மூத்த வழக்கறிஞரான நளினி சிதம்பரம் சென்னையில் அளித்த பேட்டியில், ‘தமிழக அரசின் அவசர சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்போம்’ என கூறியிருக்கிறார்.

தமிழக அரசின் நீட் அவசர சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்போம் என நளினி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு முறையாக ‘நீட்’டை மத்திய அரசு கொண்டு வந்தது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அதன் கேள்விகள் அமைந்ததால், தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. இதை தவிர்க்க, தமிழகத்தில் மட்டும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்களை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

ஆனால் இந்த அரசாணை, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதில் முக்கியமான திருப்பமாக நேற்று (ஆகஸ்ட் 13) மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , ‘நீட்டில் நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால் ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு ஒத்துழைக்கும்’ என அறிவித்தார். இதற்காகவே காத்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கரும், ‘உடனடியாக அவசர சட்ட முன்வடிவை டெல்லியில் உரிய அமைச்சகங்களிடம் முன்வைப்பதாக’ கூறினார்.

அதன்படி இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசின் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் ஆய்வுக்கு பிறகு இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான நளினி சிதம்பரம் சென்னையில் அளித்த பேட்டியில், ‘தமிழக அரசின் அவசர சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்போம்’ என கூறியிருக்கிறார். கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதாக கூறுவது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்திருக்கிறார் நளினி சிதம்பரம். நீட் தொடர்பான வழக்கில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டவர் நளினி சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close