முதல்வரை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
அந்த வகையில், எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே, ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சபாநாயகரின் நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்த அவர், அதிகாரத்தில் இருப்பவர்கள் அளித்த நெருக்கடியால் சபாநாயகர் இதுபோன்று நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வருகிறது. அதிகார மமதையில் இது போன்று செய்கிறார்கள். மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றார்.
மேலும், இது திட்டமிட்ட சதி என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றம் செல்வோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் அதிகாரத்தை பெறுவோம் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அது நடைபெறாது. முதல்வரை மாற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.