வைகோ தயாரிப்பில் உருவாகும்‘வேலுநாச்சியார் திரைப்படத்திற்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்’ என நடிகர் நாசர் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் குறித்து, ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு நாட்டிய நாடகம் சென்னை நாரதகான சபாவில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நாடகத்திற்கு வைகோவின் அழைப்பின் பேரில் நடிகர் சங்க தலைவர் நாசர் , தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழருவிமணியன், ஓய்வு பெற்ற நீதியரசர் அரி பரந்தாமன், கவிஞர் காசி ஆனந்தன், அபிராமி ராமநாதன், பெ. மணியரசன் , மூத்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், விஜிபி.சந்தோஷம், நடிகர்கள் விஜயகுமார், பார்த்திபன், விவேக், தம்பி ராமையா, நடிகை கஸ்தூரி மற்றும் தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர் .
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசும் போது, ‘வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக பார்த்து திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கான உரிமைகளை பெறுவதற்கு உத்வேகம் வந்தது. இந்த நாடகத்தை பார்க்க எங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வைகோவிற்கு நன்றி’ என கூறினார்
நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘இந்த நாடகத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். சுதந்திர போராட்ட வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழக பெண்கள் உரிமைக்காக வீரத்தோடு போராடிய வரலாற்றை நாடகமாக தந்த உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் . இதற்காக எவ்வளவு உழைப்பை தந்திருப்பீர்கள் என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது . வீரத்தாய் வேலுநாச்சியார் திரைப்படம் உருவாக நடிகர் சங்கம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.’ என்றார்.
நடிகர் பார்த்திபன், ‘வேலு நாச்சியார் திரைப்படம் உருவாக என்னுடைய பங்கும் கண்டிப்பாக இருக்கும்’ என கூறினார் . நாடகம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘ஜி.எஸ்.டி வரியால் தமிழக சினிமா பெரிதும் பாதிக்க பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 28 சதவீத வரியோடு தமிழக அரசின் கூடுதலான 10 சதவீத கேளிக்கை வரி தமிழ் சினிமாவை நசுக்கும். எனவே தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு பல்வேறு தேசிய இனங்களின் நிறத்தை அழிக்க முயல்கிறது. ஒரே மொழி, ஒரே நாடு என்ற கொள்கையை நோக்கி பயணிப்பது ஏற்புடையதல்ல. சிறுபான்மையினர் பாதுகாப்பு கேள்வி குறி ஆகி உள்ளது. ஹஜ் யாத்திரை மானியத்தை ரத்து செய்யக்கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் மதிமுக அதற்கு எதிராக கடுமையாக போராடும்’ என கூறினார்.