சசிகலாவை நீக்குவோம் என கூறியவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: டிடிவி தினகரன் எச்சரிக்கை

தியாகத்திற்கும், துரோகத்திற்குமான யுத்தத்தில் தளபதிகளாக புதுவையில் எம்எல்ஏ-க்கள் 19 பேர் தங்கியுள்ளனர். அவர்களை விலை கொடுத்து வாங்கி விட முடியாது.

சசிகலாவை நீக்குவோம் என கூறியவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களாக டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக இயங்க முடியாமல் இருந்தார். தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவரது உடல்நிலை சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதையடுத்து, திருப்பூரில் நடைபெற்றவுள்ள திருமணத்துக்கு புறப்பட்ட டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்து சில வார்த்தைகள் பேசினார்.

அப்போது, காய்ச்சல் குணமாகியுள்ளது. ஆனால், தொண்டை பிரச்னை இன்னமும் சரியாகவில்லை. மருத்துவர்கள் அதிகம் பேசக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்ட தினகரன், தமிழக அரசியல் நிலவரத்தை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், தியாகத்திற்கும், துரோகத்திற்குமான யுத்தத்தில் தளபதிகளாக புதுவையில் எம்எல்ஏ-க்கள் 19 பேர் தங்கியுள்ளனர். பணம் பாதாளம் வரை பாயும் என சில அமைச்சர்கள் கூறுகிறார்கள். அப்படி எங்கள் பக்கம் இருப்பவர்களை விலை கொடுத்து வாங்கி விட முடியாது. மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் அங்கே அமர்ந்துள்ளனர். யாருக்கும் பயந்து கொண்டு அவர்கள் அங்கே செல்லவில்லை. கடவுளை தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது. கடவுளுக்கும் உண்மைக்கும் தான் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றார்.

தன்னோடு நிற்பவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் என குறிப்பிட்ட டிடிவி தினகரன், ஆளுநர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புவதாகாவும் தெரிவித்தார். மேலும், சசிகலாவை நீக்குவோம் என கூறியவர்களுக்கு பாடம் புகட்டுவோம் எனவும் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டிடிவி தினகரன் அண்மையில் நீக்கப்பட்டார். அதையடுத்து, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவும் விரைவில் நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் இதுபோன்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close