நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பிலும் தமிழக அரசுக்கு எதிரான அவரது கருத்து எதிரொலித்தது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என கமல்ஹாசன் அப்போது குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கமல்ஹாசன் மற்றும் தமிழக அரசுக்கு இடையேயான வார்த்தை போர் முற்றியது. விளம்பரத்துக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கமல் முன்வைக்கிறார் எனவும், வருமான வரி சோதனை என மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் பேசி வந்தாலும், எதற்கும் அஞ்சாமல் தனது விமர்சன அம்புகளை தமிழக அரசு மீது தொடர்ந்து கமல்ஹாசன் எய்து வருகிறார். இவருக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை, அதனைத் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் என தனது கருத்தை கமல் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
We made justice system.Use it correct it.We can.Do not insult & abuse it.Our constitution, is robust enough 2 take all debates.Bring it on
— Kamal Haasan (@ikamalhaasan) 8 September 2017
இந்நிலையில், "நாம் தான் நீதித்துறையை உருவாக்கினோம். அதை பயன்படுத்திக் கொள்வதுடன் சரி செய்ய வேண்டும். அது நம்மால் முடியும். அதை விடுத்தது, நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது. நீதிமன்ற உத்தரவை மீறவும் கூடாது. நீதித்துறையை சரியான நோக்கில் பயன்படுத்துவோம். அரசியலமைப்புக்குட்பட்டு எல்லாவற்றையும் விவாதிக்க முடியும்" என தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் தொடரப்பட்ட வழக்கில், "போராட்டம் நடத்த தடை விதித்து" நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன் பின்னர், "சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நீதிமன்றம் உணர்ந்தே இருக்கிறது. அதேசமயம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும், அமைதியான போராட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது" என தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.