தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பெற்றோர்கள் ஏன் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசு ஊழியர்கள் ஏன் அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆசிரியர்களின் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினார். மேலும், இது தொடர்பாக இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தமிழக அரசு வற்புறுத்தாது. மாற்றங்களின் அடிப்படையில் அவர்களாக அரசுப் பள்ளியை தேடிவருவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் கேள்விக்கு மாறான ஒரு கருத்தை அமைச்சர் தெரிவித்துள்ளதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் போது, தமிழக அரசின் பதிலும் இதேபோன்று தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.