கோடை வெயிலின் வெப்பம் வாட்டி வதைத்தது, கோடை வெயில் முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது.
சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 10) இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. அதே போல, இன்று (ஜூன் 11) இரவும் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சென்னைய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே ஜூன் 11-ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்தவரை, 13ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று (ஜூன் 11) வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.06.2024: மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று (ஜூன் 11) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“