Advertisment

பெட்ரோலிய மண்டல அனுமதி பாவத்தில் திமுகவிற்கும் பங்கு : ராமதாஸ்

மு.க. அழகிரி மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சராக இருந்த போது 2012-ஆம் ஆண்டில் தான் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெட்ரோலிய மண்டல அனுமதி பாவத்தில் திமுகவிற்கும் பங்கு : ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக்கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்பிரச்சினையில் திமுக தரப்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் அமைதி பல்வேறு ஐயங்களை எழுப்பியிருக்கிறது. கடந்த 22-ஆம் தேதி செங்கம் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம்,‘‘நெடுவாசல் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிற நிலையில், 45 கிராமங்களில் பெட்ரோலியப் பொருள் தயாரிக்கும் ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதே?’’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சம்பந்தமே இல்லாமல் குண்டர் சட்டம் குறித்து பேசினாரே தவிர, பெட்ரோலிய மண்டலம் குறித்து ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை.

Advertisment

அடுத்த நாள் காஞ்சிபுரம் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம் பெட்ரோலிய மண்டலம் குறித்து மீண்டும் வினா எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின்‘‘கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் ‘எள்’ என்றால் ’எண்ணெய்’ என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார்’’ என்பதையே வேறு வேறு வார்த்தைகளில் மாற்றி மாற்றிக் கூறினார். ஆனால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதை திமுக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? அதனால் கடலூர், நாகை மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்புகள் என்ன? இத்திட்டத்தை கைவிட வேண்டுமா அல்லது செயல்படுத்தலாமா? என்பது குறித்தெல்லாம் மு.க. ஸ்டாலின் எதுவுமே கூறாமல் பேட்டியை முடித்தார்.

அதைத் தொடர்ந்து 26-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த ஸ்டாலினிடம் மீண்டும் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,‘‘இதனைக் கண்டித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்’’ என்று கூறி எந்த பதிலும் அளிக்க மறுத்து விட்டார். உண்மையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதைக் கண்டித்து திமுகவோ, மு.க.ஸ்டாலினோ இன்று வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கடந்த 23-ஆம் தேதி பெட்ரோலிய மண்டலம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு மழுப்பலாக பதிலளித்ததைத் தவிர இந்தப் பிரச்சினையில் ஸ்டாலின் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. தமிழகத்தின் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினையில் திமுக வாயிருந்தும் ஊமையாகி விட்டது ஏன்?

பெட்ரோலிய மண்டலத் திட்டத்தின்படி பெருமளவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும், எண்ணெய் கிடங்குகளும் அமைக்கப்பட்டால் அந்த இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறி விடும்.

இப்படி ஒரு மோசமானத் திட்டத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில் திமுகவுக்கு என்ன தயக்கம்? இத்திட்டம் குறித்து எந்த அறிக்கையும் விடாமல் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயல்வது ஏன்? என்பன போன்ற வினாக்களுக்கு ஸ்டாலின் தான் விடையளிக்க வேண்டும்.

நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கான இடங்கள் கடந்த 2007-08ஆம் திமுக ஆட்சியில் தான் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. திமுகவைச் சேர்ந்த மு.க. அழகிரி மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சராக இருந்த போது 2012-ஆம் ஆண்டில் தான் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக தங்களின் குழந்தையான நாகை, கடலூர் மாவட்ட பெட்ரோலிய மண்டலத்தை நாமே எப்படி எதிர்ப்பது என்ற மன உறுத்தல் காரணமாகத் தான் இந்த விஷயத்தில் திமுக அமைதி காக்கிறதா£? என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் தாண்டி, முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்து, ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக, மிகவும் பாதுகாப்பான முறையில் விருப்ப ஓய்வு அளித்து அனுப்பி வைக்கப்பட்ட தமது நண்பர் இராமசுந்தரம் தான் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நாகார்ஜுனா உரம் மற்றும் இரசாயன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பதால் அந்த பாசம் தான் இத்திட்டத்தை எதிர்க்கத் தடையாக உள்ளதா? என்பதை விளக்குவதும் நல்லது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், கைவிடப்பட்ட மீத்தேன் திட்டமாக இருந்தாலும் அவற்றுக்கு அனுமதி அளித்தது திமுக அரசு தான். பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு அனுமதி அளித்த பாவத்திலும் திமுகவுக்கு பங்குண்டு. அத்தனை அழிவுத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி விட்டு, அதனுடன் தங்களுக்கு சம்பந்தமில்லை என்பது போல திமுக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். நேரம் வரும் போது அதிமுகவுடன் சேர்த்து திமுகவையும் மக்கள் தண்டிப்பர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment