மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் என்ன தவறு உள்ளது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்டனர்

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்கினார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, “முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை எவராலும் வீழ்த்த முடியாது. ஆட்சிக்கு திமுக வர எந்த தகுதியும் இல்லை” என கூறினார்.

விழாவில் சபாநாயகர் தனபால் பேசும் போது, “எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பியவர்கள் யாரும் கெட்டதில்லை என்பதற்கு நானே உதாரணம்” என கூறினார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மாவட்டம் என கூறும் அளவுக்கு விழா நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழகத்தில் தீயசக்திகளை அழிக்க மக்கள் பெற்றுள்ள ஒரே ஆயுதம் அதிமுக.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். மக்களின் ஆதரவு கொண்ட ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. எத்தனை சித்துவேலைகளை செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது. தமிழக மக்களின் நலனைக் கெடுக்க சுயநலவாதிகள் முயற்சி செய்கின்றனர்” என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம் கட்டப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி மையம் அமைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் புதிதாக தடுப்பணைகள் கட்டப்படும்.

திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத்தராதது ஏன்? மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த திமுக, தமிழக மக்களுக்கு செய்தது என்ன? எம்எல்ஏக்களின் கணக்கு கூறும் திமுக, முந்தைய ஆட்சியில் மைனாரிட்டி அரசாக இருந்தது. தனது குடும்பத்தினருக்கு மத்திய ஆட்சியில் பதவிகள் கேட்டு கடிதம் எழுதியது திமுக.  தமிழக அரசை யாராலும் அசைக்க முடியாது. சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கண்டு பொறாமை கொள்ளும் பலர் தேடிதேடி குறைகூறுகின்றனர்.

நீர் நிலைகளில் வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் நிதி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு கடன், நிவாரணம் உள்ளிட்டவற்றை அறிவித்து உற்ற நண்பனாக திகழ்கிறது தமிழக அரசு. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குற்றமா?. பதவிக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தது யார் என்பதை மக்கள் அறிவர். எம்ஜிஆர் காலத்திலிருந்தே மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாகவே இருக்கிறது. சாதியற்ற சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர் எம்ஜிஆர்.

அனைவரையும் சமமாக மதித்தவர் எம்ஜிஆர். தனது திரைப்படங்களில் முற்போக்கு சிந்தனைகளை புகுத்தியவர் எம்ஜிஆர். நான் கூறும் கதைகளை பற்றி விமர்சிப்பவர்கள் எனது பேச்சை முழுமையாக கேட்பதை அறிகிறேன். நான் கூறும் கதைகளை யார் விமர்சித்தாலும் நிறுத்த மாட்டேன்” என்றார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close