அன்பரசன் ஞானமணி
இந்த வருட தொடக்கத்தின் வைரல் வார்த்தை 'ஆன்மிக அரசியல்' என்றால் அது மிகையாகாது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பின் போது, நமது அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதுமுதல் இன்று வரை, ஆன்மிக அரசியல் என்ற வார்த்தை சமூக தளங்களில் மட்டுமின்றி, அனைத்து தரப்பிலும் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறி உள்ளது. ஏற்கனவே, 'பக்தாள்' என்று பாஜகவினரை கலாய்த்து வரும் நெட்டிசன்கள், ரஜினியும் 'காவி' அரசியலில் தான் ஈடுபடப் போகிறார் என விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆன்மீக அரசியல் என்றால் என்ன? என்று இன்று செய்தியாளர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள ரஜினி, "உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி, மத சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல்; ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது" என விளக்கமளித்தார்.
இந்த ஆன்மீக அரசியல் குறித்து அனைவரும் விவாதிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கும் சுவாமி விவேகானந்தர், ஒரு நாட்டின் அரசியல் எப்படி இருக்க வேண்டும்? என்று விளக்குகிறார் என்பதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
சுவாமி விவேகானந்தர் கூறுவதாவது, "நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற்கில்லை. மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக்கொள்வர். நாடாளுமன்றத்தில் நல்ல சட்டங்கள் வருவதால் மட்டுமே நாடு சிறந்துவிடாது. ஆன்மிகத்தன்மையும் வேண்டும். இதன் பொருள் மூடநம்பிக்கைகளை சுமக்க வேண்டும் என்பதல்ல" என நேர்படுத்துகிறார்.
அதாவது ஒரு நாட்டின் அரசியலில் ஆன்மிகத் தன்மையும் இருக்க வேண்டும். ஆனால், அதற்காக மூட நம்பிக்கைகள் இருக்கக் கூடாது என சுவாமி விவேகானந்தர் விளக்கம் அளிக்கிறார்.