தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், 'தேவைப்பட்டால் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சி தலைவரான திருநாவுக்கரசர், தேவைப்பட்டால் ராஜினாமா குறித்து ஆலோசிக்கப்படும் என கூறி உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனால் இக்கூட்டத்தில் ராஜினாமா குறித்த ஆலோசனையும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? என சட்ட வல்லுநர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, "திமுக எம்.எல்.ஏக்கள் 89 பேர் உள்ளனர். காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1 உள்ளனர், அதில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளார். தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் இன்னும் தங்களது இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அரசியல் நெருக்கடி குறித்து அவசரமாக விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். கூட்டத்தின் முடிவில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது என முடிவெடுத்து, ஒருவேளை ராஜினாமா செய்துவிட்டால், அரசியல் ரீதியாக ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த பிரச்னையை கவனப்படுத்த உதவும்.
அதேநேரம், திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை என்றும், ஒருவேளை தேர்தல் வராமல் போனால் சட்டமன்றத்தில் அதிமுக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, வழக்கறிஞர்களிடமும், சட்ட வல்லுநர்களுடனும் கேட்கப்பட்ட போது அதற்கு, இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்படி எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றம் ஒன்று இருக்கக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.
எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அரசுக்கோ, சட்டமன்றத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இப்போது உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு அப்படியே தொடரும்.
சட்டமன்றத்தை நீக்கவோ அல்லது ரத்த செய்யவோ எந்த அவசியமும் இல்லை என்கின்றனர்.