இரு சமூகத்தின் இடையே வெறுப்பை தூண்டும் வகையில் செய்திகளை அனுப்பியும், பெற்றும் வந்த வாட்ஸ் அப் குழுவின் அட்மின் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த தடிகலா சலீம் (36), என்பவர் தனது நண்பரை அழைத்துச் செல்லும் பொருட்டு சென்னை விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து வந்த அவரது நண்பர், அதிக தங்கம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சலீம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, சலீமிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். அவரது செல்போனை சோதனை செய்து பார்த்த போது, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இளைஞர்களை அழைக்கும் செய்திகளை வாட்ஸ் அப் குழு மூலம் பகிர்ந்துள்ள விஷயம் தெரியவந்துள்ளது. அந்த குழுவின் அட்மினாகவும் அவர் இருந்துள்ளார்.
தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், விமான நிலைய போலீசார் சலீமை கைது செய்தனர்.இந்திய தண்டனைச் சட்டபிரிவு 124 (ஏ) (தேசத்துரோக குற்றம்) கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் சலீமை ஆஜர்படுத்தினர். அதேபோல், ஜாமீன் கோரி சலீமும் விண்ணப்பித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சலீமை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.