Advertisment

வாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்!!! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..

பகலிலே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ieTamil-28-may-01

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மக்களின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வந்த காலம் போய், இப்போது அதுவே மக்களின் தேவ புஸ்தகம் போல் மாறிவிட்டது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்றார்கள் முன்னோர்கள். ஆனால் இப்போது வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களே மெய். ஃபேஸ்புக்கில் வரும் வீடியோக்களே மெய். அதை வதந்தி, நம்பாதீர்கள் என்று சொல்லோவோர் தான் பொய் என்பது போல் காலம் மாறிவிட்டது.

Advertisment

வெறும்,வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி திருவண்ணாமலையில் ஒரு மூதாட்டி, வேலூர் மாவட்டத்தில் மன நோயாளி பெண், ராணிப்பேட்டையில் இளைஞர் என மூவர் அடித்தே கொல்லப்பட்டது கொடுமையிலும் கொடுமை.எங்கே செல்கிறது தமிழகம்? குடிக்க தண்ணீர் கேட்டு வந்தவனை எல்லாம் அடித்துக் கொல்லும் அளவிற்கு தமிழர்கள் கல் நெஞ்சம் படைத்தவர்களாக மாறி விட்டார்களா? என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் கேட்க வைக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூர் கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த ருக்குமணி, சந்திரசேகரன், மோகன்குமார், வெங்கடேசன், கஜேந்திரன் ஆகிய 5 பேர் காரில் சென்றன.அப்போது ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் வழி கேட்டுள்ளனர். அவர்களுக்கு சிரித்தப்படியே பதில் சொல்லிய அந்த சிறுமிக்கு ருக்குமணி மலேசியா சாக்லேட்டை பரிசாக அளித்தார். அதைப்பார்த்த சிறுமியின் பாட்டில் நீலா குழந்தை கடத்தும் கும்பல் காரில் வந்திருப்பதாக கூறி கூச்சலிட்டார். அவரின் சத்தைக்கேட்டு வந்த கிராம மக்கள் அவர்களை பேசவே விடாமல் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். காரை அடித்து நொறுக்கினர். இதில் ருக்குமணி சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.

கடந்த 10 ஆம் தேதி அரங்கேறிய இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இதற்கு முக்கிய காரணமான சிறுமியின் பாட்டி நீலாவை கைது செய்தனர். கூடவே தாக்குதலில் ஈடுப்பட்ட 65க்கும் மேற்பட்ட கிராம மக்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அத்திமூர் கிராமத்தின் நிலை மிகவும் பரிதாபமாக மாறிவிட்டது. பலர் ஊரை காலி செய்துவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே திருடர்களை போல் மறைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். கிராம் முழுவதும் ஒரு மயான பீதி பரவியுள்ளது.

போலீஸ் வளையத்தில் உள்ள அத்திமூர் கிராம மக்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது தெரிந்து, நம்மையும் கைது செய்துவிடுவார்களோ எனப் பயந்து பயந்து ஒவ்வொரு இரவையும் கழித்து வருகின்றனர். சிலர், உறவினர்கள் இருக்கும் ஊர்களுக்கு இரவோடு இரவாகச் சென்று தலைமறைவாகி விடுகின்றனர். காடுகள், பம்புசெட்டுகளில் பதுங்யிருப்பவர்களுக்கு அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மூலம் இரவு நேரத்தில் உணவு அனுப்பபடுகிறது. பகலிலே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நேரத்தில், கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப நிலைகள் மிகவும் மோசமாகிவுள்ளது. கணவர் எங்கு இருக்கிறார்? எப்போது வெளியில் வருவார்? ”15 நாட்கள் காவல் என்று போலீசார் அழைத்து சென்றனர் ஆனால் இப்போது வரை அவர்கள் யாருமே வீடு திரும்பவில்லை: என்று தவிப்புடன் குழந்தைகளை வைத்துக் கொண்டு பல பெண்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தவிப்புடன் ஒரு பெண் பகிர்ந்திருப்பது, “ என் கணவர் அன்றாடம் கூலி தொழிலுக்கு செல்லுபவர். அவரிடம் பெரிய ஃபோன் (ஸ்மார்ட்ஃபோன்) கூட இல்லை. கேமரா இல்லாத ஒரு சின்ன ஃபோன் தான் வைத்திருக்கிறார். அவரை கூட கைது செய்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினாயா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பல முறை நேரில் சென்று போலீசாரிடம் கேட்டேன், 15 நாட்கள் காவல் தான், முடிந்ததும் வீடு வருவார் என்றார்கள். ஆனால் இப்போது வரை அவரை விடவில்லை. வீட்டில் இருக்கும் கோழி, ஆடுகளை விற்று தான் தினமும் கஞ்சி குடித்து வருகிறோம்” என்று கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

இவரைப் போலவே, அத்திமூரில் பல பெண்கள் கண்ணீருடன் தங்களின் கணவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் இதுப்போன்ற சம்பவம் எதுவும் அங்கு நடந்திட விடக் கூடாது என்பதற்காக மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் காவல் நிலையங்கள் மூலமாகத் துண்டு பிரசாரமும் ஒலிபெருக்கி மூலம் விழிப்பு உணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகின்றன.

இதுக்குறித்து பேசியுள்ள திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர், நிலவழகன்,” இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தக் குழந்தையும் கடத்தப்படவில்லை. குழந்தையைக் கடத்த வந்ததாக நினைத்து தாக்குதல் நடத்தியதில் ஓர் உயிர் பரிபோனது வருத்தம் அளிக்கிறது. உண்மையில் அவர்கள் குழந்தைதான் கடத்த வந்தார்களா என விசாரிக்காமல், அவர்கள் சொல்ல வந்ததையும் காதில் வாங்காமல் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது தவறு.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் வரும் பொய்யான தகவலை உண்மை என்று நம்பி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை 65 பேரை கைது செய்து உள்ளோம். அதில் பயங்கரத் தாக்குதல் நடத்திய 20 பேர்மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதுப்போல் நாகர்கோவிலிலும் பிச்சை கேட்ட பாட்டியை குழந்தை கடத்த வந்தாக கூறி இளைஞர்கள் சிலர், அவரை கடலில் தூக்கி எறிந்து விட்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது. மக்களின் முன்னேற்றத்திற்காக கண்டுப்பிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுப்பிடிப்புகள், மக்களின் உயிரையே பறிக்கும் அளவிற்கு மாறி போனதிற்கு யார் காரணம்?

Whats App
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment