சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இது மு.க.ஸ்டாலினுக்கும், டிடிவி.தினகரனுக்கும் பின்னடைவு!
தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறித்த தினத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த மாதம் இபிஎஸ்-ஓபிஎஸ் கைகுலுக்கிக் கொண்டதை அடுத்து, இப்போது இபிஎஸ் -டிடிவி.தினகரன் இடையே மோதல் மூண்டிருக்கிறது. முன்பு ஓபிஎஸ்-திமுக மறைமுக கூட்டணி என விமர்சித்த இபிஎஸ் தரப்பினர், இப்போது திமுக-டிடிவி இடையே கூட்டணி ஏற்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
அதாவது, ஜெயலலிதா மறைந்த நாள் முதல் ஸ்டாலினுக்கு ஒரே நிலைப்பாடுதான்! அதிமுக ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால், திமுக ஜெயித்துவிட முடியும் என்பதே அது! அதனால் ஆரம்பத்தில் ஓபிஎஸ்.ஸை புகழ்ந்து ‘பூஸ்ட்’ கொடுத்த திமுக.வினர், இப்போது டிடிவி.தினகரனுக்கு வாலி பாடுகிறார்கள். இந்த விஷயத்தில் ஓபிஎஸ்.ஸைவிட திமுக.வினருக்கு அதிகம் நம்பிக்கை கொடுத்தவர், டிடிவி.தினகரன்தான்!
காரணம், ஓபிஎஸ்.ஸுக்கு டெல்லி முட்டுக்கொடுத்த பிறகும், 11 எம்.எல்.ஏ.க்களைத் தாண்டி அவரால் அணி திரட்ட முடியவில்லை. ஆனால் டிடிவி.தினகரன் மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடியைத் தாண்டி 21 எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக அணிதிரட்டிக் காட்டிவிட்டார். கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்த அடுத்த நிமிடமே, எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது சாமானியனுக்கும் புரிந்தது.
அடுத்த தினமே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது திமுக. கவர்னரை இருமுறை நேரில் பார்த்தார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வலியுறுத்தினர். இன்னொருபுறம் டிடிவி.தினகரன் தன் வசம் உள்ள எம்.எல்.ஏ.க்களை தாய்க்கோழியாக பாண்டிச்சேரி, கர்நாடகா என இடங்களை மாற்றி பாதுகாத்து வருகிறார்.
இதோ... கவர்னரிடம் டிடிவி.தினகரன் அணியினர் மனு கொடுத்து ஒரு மாதம் ஆகிறது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கான அறிகுறி எதுவும் அருகில் இல்லை. மாறாக, விவகாரம் நீதிமன்றத்திற்கு போயிருக்கிறது. டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாறவில்லை. ஆனாலும் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் ‘காஸ்ட்லி’யான வழக்கறிஞர்களை அனைத்துத் தரப்பும் இந்த வழக்குகளில் நுழைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயிப்பதற்கான ‘மூவ்’ மட்டுமல்ல அது! எப்படியும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வரை சந்தித்தே தீர வேண்டியிருக்கும். எனவே தொடக்கத்திலேயே ‘டாப் மோஸ்ட்’ வழக்கறிஞரை அமர்த்திவிடும் வியூகம்தான் அது! ஆக, உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உயர்நீதிமன்ற பெஞ்ச், உச்சநீதிமன்றம் என இந்த வழக்கு இன்னும் பயணப்படும் தூரம் அதிகம்!
அதுவரை டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கை ரத்து ஆகுமா? தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி! திருச்சியில் சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘சில ஆண்டுகளோ, சில மாதங்களோ உங்களை காத்திருக்க சொல்லவில்லை. சில நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள். ஒருவேளை நான் இந்த மேடையை விட்டு இறங்கும் முன்புகூட இந்த ஆட்சி கலைந்துவிடக்கூடும்’ என்றார்.
அதேபோல டிடிவி.தினகரன், ‘இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன். ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்புவேன்’ என முழங்கினார். ஸ்டாலினைப் பொறுத்தவரை, அவருக்கு ஆட்சியில் அமரும் கனவு! டிடிவி தினகரனுக்கு இந்த ஆட்சியை வீழ்த்தினால்தான் அதிமுக.வை கைப்பற்றுவது குறித்து யோசிக்கவே முடியும் என்கிற சூழல்!
ஆக, இருவருக்கும் இலக்கு வெவ்வேறாக இருந்தாலும், பயணிக்க வேண்டிய பாதை ஆட்சிக் கவிழ்ப்புதான்! அதற்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்கள் கை கோர்த்து ஆக வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த இரு தரப்பையும் மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள அதிகார மையங்களை வைத்து லாகவமாக சமாளித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
டிடிவி.தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலரையாவது இழுக்க என்னென்னவோ செய்து பார்த்தார் எடப்பாடி! கர்நாடகாவுக்கு போலீஸ் படையை அனுப்பி வைத்தார். டிடிவி.தினகரன், பழனியப்பன், செந்தில்பாலாஜி என ஒவ்வொருவர் மீதாக வழக்குகளை பாய்ச்சியும் பார்த்தார்கள். எதுவும் பலன் கொடுக்காத நிலையில், காலத்தைக் கடத்தி அவகாசம் எடுக்கும் நிலைக்கு எடப்பாடி தரப்பு வந்தது.
டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கமும், அதைத் தொடர்ந்து மூண்டிருக்கும் சட்ட யுத்தமும் அதற்கு வெகுவாக கை கொடுத்திருக்கிறது. இப்போதைக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருப்பதால் அதுவரை பெரிய அரசியல் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லை. அதன்பிறகும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.
ஆட்சியைக் கவிழ்க்க, நாட்களில் கெடு வைத்த ஸ்டாலினுக்கும், டிடிவி.தினகரனுக்கும் இது பின்னடைவு! காலம் கடத்தும் ‘டெக்னிக்’கால், எடப்பாடிக்கு தற்காலிக வெற்றி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.