ஒருவேளை டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காவிட்டால், விஷால் மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரில் விசில் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி.டி.வி.தினகரன் – வி.கே.சசிகலா ஒரு தரப்பாகவும், ஓபிஎஸ் - இபிஎஸ் இன்னொரு தரப்பாகவும் இரட்டை இலை சின்னத்துக்கு மோதினார்கள். இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பல கட்ட விசாரணை நடத்தியது. முடிவில் கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.கே.நகரில் ஏற்கனவே டி.டி.வி.தினகரன் களம் இறங்கியபோது வழங்கிய தொப்பி சின்னத்தை அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது.
டி.டி.வி.தினகரன் சார்பில் இதை வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் வாதாடினார். ‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இறுதியானது அல்ல. அதில் நீதிமன்றம் தலையிடலாம்’ என கபில்சிபல் வாதங்களை முன்வைத்தார்.
இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி, தொப்பி சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிமன்றம், ‘சின்னம் ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் வேலை. இதில் இபிஎஸ் தரப்பு ஏன் தலையிட வேண்டும்?’ என கேள்வி எழுப்பியது.
நேற்று மாலை 4 மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ‘சின்னம் ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதில் தலையிட விரும்பவில்லை’ எனக் கூறி டிடிவி தரப்பு கோரிக்கையை நிராகரித்தது. இது டிடிவி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகரில் வேறு சுயேட்சைகளும் தொப்பி சின்னத்தை கேட்கும்பட்சத்தில், குலுக்கல் முறையில் தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு இருக்கிறது. சின்னங்கள் பட்டியலில் இருந்து தொப்பி சின்னத்தை நீக்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.
தொப்பி சின்னம் தவிர்த்து விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை சின்னங்களைக் கேட்டுள்ளார் டி.டி.வி. தினகரன். சுயேட்சையாகப் போட்டியிடும் நடிகர் விஷாலும் விசில் சின்னம் வேண்டுமெனக் கேட்டுள்ளார். அது கிடைக்கவில்லை என்றால், படகு மற்றும் கேரம் போர்டு சின்னங்களைக் கேட்டுள்ளார். டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காத பட்சத்தில், விசில் சின்னம் இந்த இருவரில் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.