/tamil-ie/media/media_files/uploads/2020/04/Untitled-79.jpg)
தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து முதல் இரண்டு வாரங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் கொரோனா நிலவரங்களை ஊடகங்களிடம் தெரிவித்து வந்தார். மிகவும் சாதாரணமாக ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து ஊடகங்களின் சிக்கலான கேள்விகளை எதிர்கொள்வதில் சற்று தடுமாறத்தான் செய்தார். அதன் பிறகுதான், தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரியான சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்-ஐ கொரோனா நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்க ஊடகங்கள் முன்பு நிறுத்தியது. பீலா ராஜேஷ் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை, என அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஊடகங்கள் முன்பு புள்ளிவிவரங்களுடன் அறிவித்து வருகிறார்.
கொரோனா பரவலைத் தடுக்க ஒட்டு மொத்தமாக நாடே ஊரடங்கில் முடங்கியிருக்கும் நிலையில், தமிழக மக்கள் இன்று மாநிலத்தில் கொரோனா நிலவரங்களைத் தெரிந்துகொள் டிவிகளில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் நேர்காணலுக்காக காத்திருக்கின்றனர். கொரோனா அளவுக்கு தமிழகத்தில் இப்போது பலருக்கும் தெரிந்த பெயர் பீலா ராஜேஷ்.
ஊடகங்களிடம் பேச வந்துவிட்டாலே அரசியல்வாதியானாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரியானாலும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் வருவது சாதாரணம்தான். அப்படி, நேற்று முன் தினம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை அறிவிக்கும்போது, டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூற சர்ச்சையானது. இவருடைய இந்தக் கூற்றை எடுத்துக்கொண்டு சிலர், குறிப்பிட்ட மதத்தினர் கொரோனா வைரஸ் பரப்புவதாக விஷப் பிரசாரம் செய்யவும் துணிந்தனர். இதனால், சிலர் பீலா ராஜேஷ்-ஐ சங்கி என்று விமர்சித்தனர். அதே நேரத்தில், சிலர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளில், பீலா ராஜேஷின் விரைவான தீவிர நடவடிக்கைகளை ஆதரவு தெரிவித்து பாராட்டவே செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று ஊடகங்களிடம் பேசிய பீலா ராஜேஷ் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அறிவித்தபோது, தப்லிக் ஜமாத் என்பதை தவிர்த்துவிட்டு ஒரே சோர்ஸில் இருந்து பரவியுள்ளது என்று மட்டுமே கூறி தன்னை திருத்திக்கொண்டார்.
யாரையும் எளிதில் பாராட்டிவிடாத முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!” என்று பாராட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 4, 2020
இப்படி, தமிழகதில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டு சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளை கண்காணித்துவரும் பீலா ராஜேஷ் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒன்றாக பெற்றுவருகிறார். யார் இந்த பீலா ராஜேஷ்? இவரது பின்னணி என்ன?
யார் இந்த பீலா ராஜேஷ்?
தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் பீலா ராஜேஷ் 1969 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர். இவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாத்தான் குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ராணி வெங்கடேசனின் மகள் ஆவார். 2006-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் சாத்தான்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த ராணி வெங்கடேசன், 2016-ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதனிடம் தோல்வியடைந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Untitled-81-300x200.jpg)
பீலாராஜேஷின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசனின் குடும்பம் பெரிய அளவில் சவுக்கு வியாபாரம் செய்து வந்தனர். அதனால், அவர்கள் சென்னை கொட்டிவாக்கத்தில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி பயிரிட்டனர். இப்படி அரசியல்வாதி- காவல்துறை தம்பதியரான ராணி - வெங்கடேசன் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் பீலா ராஜேஷ்.
இந்த பின்னணியில், பீலா ராஜேஷ் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம்தான். படிப்பில் படு சுட்டியான பீலா ராஜேஷ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டரானார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Untitled-82-300x200.jpg)
பீலா ராஜேஷ், 1989-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸை காதலித்து 1992-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மருத்துவராக இருந்த பீலா ராஜேஷ், திருமணத்துக்குப் பிறகு, ஐபிஎஸ் அதிகாரியான தனது கணவரைப் பார்த்து தானும் அவரைப் போல உயர் அதிகாரியாக வேண்டும் என்று முடிவு செய்து குடிமைப் பணி தேர்வு எழுதினார். தன்னுடைய முயற்சியாலும் உழைப்பாலும் 1997-ம் ஆண்டு பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். பீகார் மாநில ஐ.ஏ.எஸ் கேடரான பீலா ராஜேஷ், தனது கணவர் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ் தமிழகத்தில் பணிபுரிகிறார் என்று கூறி தனது பணியை தமிழகத்துக்கு மாற்றிக்கொண்டார். பின்னர், தமிழகத்தில் இருந்து 2003-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவர் மத்திய அரசின் ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் அதிகாரியாக பணியாற்றினார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Untitled-83-300x200.jpg)
ஆனால், பீலா ராஜேஷுக்கு சொந்த மாநிலத்தில் குடும்பத்துடன் இருந்து பணி புரிய வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. அதனால், சட்டரீதியாக போராடி, மீண்டும் தமிழகத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்தார்.
தமிழகத்தில், செங்கல்பட்டு துணை ஆட்சியர், நகர் ஊரமைப்பு இயக்குனர், மீன்வளத்துறை இயக்குனர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ், தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு 2019 பிப்ரவரியில் சுதாராத்துறை செயலாளாரானார்.
பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ் தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஏடிஜிபி-யாக உள்ளார். அரசு நிர்வாகம் - கால்வதுறை தம்பதிகளான பீலா ராஜேஷ் - ராஜேஷ் தாஸ் தம்பதியின் வீடு சென்னை கொட்டிவாக்கத்தில்தான் உள்ளது. இவர்களது வீட்டுக்கு அருகில்தான் பீலா ராஜேஷின் பெற்றோர்களான ராணி வெங்கடேசன் வீடும் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Untitled-80-300x200.jpg)
சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பீலா ராஜேஷ் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டுவருகிறார். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவும் காலத்தில், பீலா ராஜேஷ் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். ஊடகங்களை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமாணவர்களின் எண்ணிக்கை, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை என அனைத்து புள்ளிவிவரங்களையும் தெரிவித்து வருகிறார். மாநிலத்தின் ஒட்டு மொத்த சுகாதாரப் பணியாளர்களையும் கொரோனா தடுப்பு பணிகளில் முடுக்கி விட்டுள்ளார். தினமும் கொரோனா நடவடிக்கைகள் புள்ளிவிவரங்களை முதல்வர் பழனிசாமியிடமும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடமும் தெரிவிக்கிறார். இதையடுத்து, மத்திய அரசுக்கு ரிப்போர்ட்களை அனுப்புகிறார். ஊடகங்களையும் தயக்கமில்லாமல் தைரியமாக எதிர்கொள்கிறார். விமர்சனங்கள் வருகிறபோது, அதை திருத்திக்கொள்ளவும் செய்கிறார்.
இந்த இரண்டு வாரங்களில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். தனது துரித நடவடிக்கையால் தமிழக மக்களின் மனங்களை வென்றுள்ள பீலா ராஜேஷ், விரைவில் கொரோனாவை வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us