யார் இந்த சி எஸ் கர்ணன்?

என் அருகில் அமர்ந்திருந்த ஒரு நீதிபதி, தெரிந்தே அவரது ஷூக்கள் என் மீது படும்படி செய்து, பின்பு மன்னிப்பு கேட்கிறார்....

நீதித்துறையில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவ காரணமாக இருப்பவர் சி.எஸ்.கர்ணன். அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கே கைது வாரண்ட் பிறப்பித்து, அதிர்வலைகளை ஏற்படுத்தினார் நீதிபதி சி எஸ் கர்ணன். இந்நிலையில், அவரை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நீதிபதி கர்ணனை கைது செய்ய, 5 பேர் கொண்ட கொல்கத்தா போலீஸ் குழு சென்னையில் முகாமிட்டுள்ளது.

கருணாநிதி எப்படி கர்ணன் ஆனார்?

சி எஸ் கருணாநிதி என்பதுதான் அவரது பெற்றோர் வைத்த பெயர். எம்ஜிஆர் அரசியலில் வளர ஆரம்பித்தபோது, தனது பெயரை சி எஸ் கர்ணன் என மாற்றிக் கொண்டார். எம்ஜிஆரின் அரசியல் எதிரியின் பெயர் தனது பெயராக இருப்பதால், இப்படி மாற்றிக் கொண்டாராம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர், தங்களின் சக நீதிபதியாக பணிபுரிந்த கர்ணன் குறித்த பல விஷயங்களை நினைவு கூர்ந்தனர்.

அவர்களுள் சிலர் கூறுகையில்,மெட்ராஸ் பெஞ்சிற்கு கர்ணன் வருவதற்கு முன்புவரை, அவரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை என்றனர். குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு கர்ணனுடன் சென்னையில் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி டி ஹரிபரந்தாமன் பேசிய போது, “அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அவர் ஒரு குற்றவியல் வழக்கறிஞர் என்றே எங்களிடம் கூறப்பட்டது” என்றார்.

ஆனால், கொலீஜியம் கர்ணனை தேர்ந்தெடுத்தது. இதுகுறித்து நீதிபதி மிஸ்ரா கடந்த வருடம் அளித்த பேட்டியில், அந்த கொலீஜியத்தில் இருந்ததற்காக தான் வருத்தப்படுவதாக, வெளிப்படையாக சொன்னார். செவ்வாய் கிழமையன்று மீண்டும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது அவர், “நீதிபதி கங்குலி, கர்ணனின் பெயரை முன்மொழிந்ததால், அந்த கொலீஜியத்தில் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன் என முன்பு தெரிவித்தேன்” என்றார்.

நீதிபதி கங்குலி பேட்டியளித்த போது, ‘கர்ணனின் பெயரை எனக்கு பரிந்துரை செய்தது யார் என்பதை நான் மறந்துவிட்டேன். அவருடைய கைது குறித்து நான் ஏதும் கருத்து கூற விரும்பவில்லை’ என்றார்.

கர்ணனை தேர்வு செய்த தேர்வுக் குழுவில் இருந்த நீதிபதி ஒருவர் கூறுகையில், இந்திய தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணனின் சகோதரர் கே ஜி பாஸ்கரனிடம் நெருக்கமாக கர்ணன் இருந்தார் என்றார். ஆனால், இதனை பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார். மறைந்த தனது சகோதரருக்கும் கர்ணனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். கர்ணன் தேர்வான பின்னரே அவரை சந்தித்தேன். என்னுடைய பதவிக் காலத்தில் சுமார் 300 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்றனர். உயர்நீதிமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளின் பின்புலங்களை பார்ப்பதற்கு சிஜிஐ-க்கு என்று தனியாக எந்த முறைகளும் இல்லை என்றார்.

தலைமை நீதிபதிகளில் சஞ்சய் கே கவுல், எம் ஒய் இக்பால் ஆகியோரிடம் கர்ணன் நேரடியாக சவால் விடுத்திருக்கிறார். 2012-ல் நீதிபதி இக்பாலிற்கு பிறகு பதவியேற்ற தலைமை நீதிபதி ஆர் கே அகர்வால், இந்தியாவின் தலைமை நீதிபதி பி சதாசிவத்திற்கு ஒரு புகார் கடிதம் அனுப்பினார். அதில், கர்ணன் என்னுடைய அறைக்கு அத்துமீறி நுழைந்தார். தமிழில் தன்னை திட்டினார் என குறிப்பிட்டிருந்தார். மேலும், கர்ணன் நீதிபதியாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறியும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அகர்வால் பதவிக்காலத்தில், கர்ணன் நீதிமன்ற அறைக்குள்ளே புகுந்து, கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அந்த வழக்கை ஒரு வழக்கறிஞராக வாதிட்டார். பின்னர் கர்ணனின் நடத்தையைப் பற்றி ஆலோசிக்க, சி ஜே அகர்வால் ஒரு முழு நீதிமன்றக் கூட்டத்தை கூட்டி நடத்தினார்.

மற்றொரு தருணத்தில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கர்ணன், தனக்கு அவமானம் மற்றும் சங்கடங்களை சில நிகழ்வுகள் ஏற்படுத்தியதாக கூறினார். அப்போது, சக நீதிபதிகள்  “குறுகிய புத்தி” உடையவர்கள் என்றும் அவர்களை “தலித்துகளை ஓரம்கட்ட பார்க்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “என் அருகில் அமர்ந்திருந்த ஒரு நீதிபதி, தெரிந்தே அவரது ஷூக்கள் என் மீது படும்படி செய்து, பின்பு மன்னிப்பு கேட்கிறார். அதனைப் பார்த்த மற்ற இரு நீதிபதிகள் சிரித்தனர்” என்றார்.

ஓய்வு பெற்ற நீதிபதி கே சந்துரு கூறுகையில், இந்திய தலைமை நீதிபதிகள் கர்ணனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டனர். “அமெரிக்காவிலுள்ள நீதித்துறை நியமங்கள் ஆணையம் மற்றும் இந்தியாவில் தேசிய நீதித்துறை நியமனம் ஆணையம் (NJAC) போன்ற அமைப்புகள் இல்லாமல் போனதால், இப்போதுள்ள நடைமுறை அமைப்பு, கர்ணன் சக நீதிபதிகளின் பணியை சீர்குலைக்க உதவியுள்ளது” என்றார்.

2016ல், தனக்கு விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி மாறுதலுக்கு தாமாகவே இடைக்கால தடை விதித்தார். மேலும், தனக்கு அந்த உத்தரவையிட்ட இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது SC/ST பிரிவினர் மீதான அட்டூழியங்கள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வேன் என்றும் அச்சுறுத்தினார்.  அந்த இரண்டு நீதிபதிகளில் இந்தியாவின் தலைமை நீதிபதி டி எஸ் தாகூரும் ஒருவர்.

மற்றொரு சக நீதிபதி கூறிம்போது, “சமீபத்தில் இறந்த கர்ணனின் தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள நீதிபதிகள் அனைவரும் அச்சப்பட்டோம்” என்றார்.

×Close
×Close