ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி 23 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றியவர். இவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து இருந்து வந்தது. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி சென்னை கோட்டையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலமாக விசாரணை நடத்தப்படும்’ என அறிவித்தார்.
ஆனாலும் அந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறாமலேயே இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் குறிப்பிட்டது பொய். அதற்காக மன்னிப்பு கோருகிறோம்’ என்றார். இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை அதிகமானது. எனவே சிபிஐ விசாரணை அல்லது பதவியில் உள்ள ஒரு நீதிபதி மூலமாக இது குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.
இந்தச் சூழலில் ஏற்கனவே அறிவித்த விசாரணை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரை நேற்று தமிழக அரசு அறிவித்தது, அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஆறுமுகசாமி. கோவையை சேர்ந்தவர் இவர். வயது 65.
ஆறுமுகசாமி 1952ம் ஆண்டு கோவையில் அர்த்தநாரிசாமி மற்றும் மாரியம்மாள் தம்பதிக்கு மகனான பிறந்தவர். கோவை வடக்கு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தவர். 1971ம் ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1974ம் ஆண்டில் சட்டம் பயின்று முடித்தார்.
கோவையில் வழக்கறிஞர் மயில்சாமி என்பவரிடம் வழக்கறிஞராக பயிற்சி பெற்று, 1986-ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடி வந்தார். இதனைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 1998ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டவர். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய பின்னர் 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளராக நியமிக்கப்பட்டவர்.
2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெறும் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச்சிற்கான உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு பொறுப்பேற்கிறார்.
விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பு, கால அளவு ஆகியன இனிதான் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.