மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆளுநர் ஆய்வு செய்தார் என்று சொல்வதே தவறு. அரசின் திட்டங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். அதை தெரிந்து கொண்ட பின், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பாராட்டியுள்ளார்" என்றார்.
தொடர்ந்து, போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, "மாநில அரசுக்கும், இந்த ரெய்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. யார் வரி ஏய்ப்பு செய்தாலும், ரெய்டு நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், சிலர் செய்த தவறினால், போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கோவில் போன்ற போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதால், மனவேதனை அடைகிறேன்" என்றார்.
மேலும், இச்சோதனைக்கு தமிழக அரசு தான் காரணம் என தினகரன் குறிப்பிட்டது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, "யார் இந்த தினகரன்? அவர் கட்சியிலேயே கிடையாது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஜெயலலிதா இறந்தபிறகு தான் அவர் வெளியிலேயே வருகிறார். பத்து ஆண்டுகளாக அவர் கட்சியிலேயே இல்லை. மீடியாக்கள் தான் அவரை ஏதோ ஒரு பெரிய அரசியல்வாதி போன்று தினமும் பேட்டி எடுத்து அதை பரபரப்பாக்குகிறீர்கள். உங்களுக்கு தினம் சூடான செய்தி வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற செய்தியெல்லாம் போடுகிறீர்கள்.
1974-ல் இருந்து நான் கட்சியில் இருக்கிறேன். நாங்கள் அனைவரும் உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நான் 6 முறை சிறைக்கு சென்றுள்ளேன். தினகரன் கட்சிக்காக எத்தனை முறை சிறைக்கு சென்றுள்ளார்? நான் படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். யாருடைய தயவாலும் இந்த இடம் எனக்கு கிடைக்கவில்லை. நான் 1991-லேயே மாவட்டச் செயலாளராக இருந்துளேன். 89-ல் மாவட்ட இணை செயலாளராக இருந்திருக்கிறேன்" என்றார்.
முன்னதாக, 'இந்த அரசு ஊழல் நிறைந்த அரசு' என ஓ.பி.எஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாங்கள் இப்போது இணைந்துவிட்டோம். அனைவரும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்" என மழுப்பலான பதிலை சொல்லிவிட்டு வேகமாக விடைபெற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.