கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் என நடிகை கஸ்தூரி ‘டிவிட்’டியிருக்கிறார். உலகநாயகனை அவர் சீண்டியது பரபரப்பு ஆகியிருக்கிறது.
கமல்ஹாசனின் அரசியல் ‘மூவ்’களுக்கு ஆரம்பத்தில் நடிகை கஸ்தூரி ஆதரவு கொடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்த கஸ்தூரி, ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். கமல்ஹாசனிடம் இருந்து விரைவில் பெரிய அறிவிப்பு வரும்’ என சிலாகித்தார்.
கமல்ஹாசனை ஒருமுறை நேரில் சந்தித்தும் பேசினார் கஸ்தூரி. கமல்ஹாசனின் ‘பிக்பாஸ்’ பற்றி சர்ச்சை எழுந்தபோதும், கமலுக்கு ஆதரவாகவே கஸ்தூரி கருத்து கூறினார். ஆனால் கமல்ஹாசனின் ஓரிரு ட்வீட்கள் புரியாத பாஷையில் இருந்தபோது மற்றவர்களைப் போலவே கஸ்தூரியும், ‘ஐயோ, மண்டை காயுதே!’ என ரீயாக்ட் செய்தார். அது, கலாய்ப்பா? அல்லது அதீத எதிர்பார்ப்பா? என்பதும் தெரியாமல் இருந்தது.
இந்தச் சூழலில் திடீரென கமல்ஹாசனை அதிரடியாக ‘அட்டாக்’ செய்கிறவிதமாக ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி. ‘கமல்ஹாசன் எட்டடி பாய்ந்தால், விஜய் நாற்பத்தெட்டடி’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார் கஸ்தூரி. இதை சற்றே விரிவுபடுத்தி, புரியும்படி பதிவு செய்யும்படி அவரது ட்விட்டர் கணக்கை பின்பற்றுகிற சிலர் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘புரிகிறவர்களுக்கு புரிஞ்சாப் போதும்’ என கூறியிருக்கிறார்.
நடிகை கஸ்தூரியின் ட்விட்..
விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் வெளியாகியிருக்கும் சூழலில், முழுக்க சினிமா பற்றியே கஸ்தூரி விமர்சனம் செய்தாதா? என விசாரித்தால், அப்படி இல்லை. காரணம், கமல்ஹாசனைப் பற்றி சினிமா ரீதியாக இப்போது எந்தப் பேச்சும் கிடையாது. எனவே இதில் அரசியல் ஒளிந்திருக்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.
விஜய்-யின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான நல்ல ரெஸ்பான்ஸ்! இதை வைத்து கமலை விட விஜய்-யின் செல்வாக்கு ஏகமாக எகிறியிருப்பதாக இந்த ‘ட்விட்’ மூலமாக கஸ்தூரி கூற வருவதாக ஒரு தரப்பில் கூறுகிறார்கள். அதாவது, கமல்ஹாசனைவிட அரசியலில் விஜய்-யால் ஜெயிக்க முடியும் என கஸ்தூரி கூறுவதாக இதற்கு அர்த்தப்படுத்துகிறார்கள். இதை நம்பி, விஜய் ரசிகர்கள் பலரும் கஸ்தூரியின் டிவிட்டர் கணக்கை முற்றுகையிட்டு நன்றி கூறி வருகிறார்கள்.
ஆனால் இன்னொரு தரப்போ, இந்த ட்விட் மூலமாக விஜய்-யையும் கஸ்தூரி கலாய்த்திருப்பதாக கூறுகிறார்கள். அதாவது, கம்ல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு பிரச்னை எழுந்தபோது அவர் நாட்டை விட்டு போவதாக குமுறினார். ஆனால் விஜய், இதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அடுத்தடுத்து இருமுறை சந்தித்து காரியத்தை முடித்துக் கொண்டார். இதை வைத்து விஜய்-யை கஸ்தூரி கேலி செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
அரசியல் விவாதங்களில் தூள் கிளப்பி வரும் கஸ்தூரி, கமல் பக்கமா, ரஜினி பக்கமா, விஜய் பக்கமா? என்பதே தனி விவாதமாகியிருக்கிறது.