ஜிஎஸ்டியை ஜெயலலிதா எதிர்த்தது ஏன்?

ஜிஎஸ்டி சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்தது ஏன் என்றும் அதற்கான விளக்கத்தை அவரிடம் சொன்னதும் சம்மதித்ததாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்தது ஏன் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை மற்றும் சரக்கு, சேவை வரி கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:

இந்தியா முழுவதும் ஒரே தேசம் ஒரே வரி என்ற அடிப்படையில் எளிமையான வரி முறை அமலுக்கு வந்துள்ளது. அவசர கதியில் கொண்டு வராமல் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வரியை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வந்தது. பொதுவாக நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் சரக்கு, சேவை வரியால் பாதிப்பு இருக்காது. முறையாக வரி செலுத்தாதவர்களும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சரக்கு, சேவை வரி அறிமுகம் என்பது வலி தரும் செய்தி என்பதால் அவர்கள் தான் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு மட்டுமே சரக்கு, சேவை வரி பாதிப்பை தரும்.

அதேநேரம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 70 ஆண்டுகள் பின்னோக்கிய நாட்டை, இளமையை நோக்கி முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்வதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்படுகிறார்.

உலக நாடுகளில் முன்னேறிய நாடுகளை போன்று இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதிலும் பிரதமர் கவனமாக இருந்து வருகிறார். ஊழலற்ற தன்மை, வெளிப்படைத் தன்மை, முன்னேற்றம் என்ற மந்திரத்தை கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு காரணம் தமிழகம் உற்பத்தி மாநிலமாக உள்ளது. அதேபோல மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலமும் சரக்கு, சேவை வரியால் மாநில வருமான குறையும் என்று கருத்து தெரிவித்தன.

இதுகுறித்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த போது, ‘சரக்கு, சேவை வரியை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு, நிதி மந்திரியிடம் இது குறித்து ஆலோசித்து வருகிறது. உற்பத்தி மாநிலங்கள் பாதிக்காத வகையில் சரக்கு, சேவை வரி அமையும். பாதிக்கப்படும் பட்சத்தில் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவர், சரக்கு சேவை வரியை அமல்படுத்த அ.தி.மு.க. குறுக்கே நிற்காது என்றார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். தற்போது அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையிலே சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நுகர்வோர்களிடம் இருந்து வரியை வசூலித்து முறையாக அரசுக்கு செலுத்த வேண்டும். சரக்கு, சேவை வரியில் ஏற்படும் பிரச்சினைகளை அப்படியே விட்டுவிடப்போவதில்லை. அவ்வப்போது கூடும் சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் பேசி தீர்வு காணப்படும். சரக்கு, சேவை வரியால் குறைந்த வலியில் நிரந்தர தீர்வு ஏற்படும். குறிப்பாக உரத்திற்காக இருந்த 12 சதவீதம் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார்.

×Close
×Close