ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக பதுங்குகிறது. ஒரே வாரத்தில் மு.க.ஸ்டாலின் இதில் தனது நிலைப்பாடை மாற்றிக் கொண்டிருப்பது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்த அன்றே தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், ‘தேமுதிக போட்டியிடாது’ என்று அறிவித்தார். விஜயகாந்தின் இந்தக் கருத்து பற்றி அக்டோபர் 13-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு பதில் கூறிய ஸ்டாலின், ‘தேமுதிக கொள்கையில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் ஆர்.கே.நகரில் எப்போது தேர்தலை வந்தாலும், ஏன் நாளையே தேர்தலை நடத்தினாலும் திமுக சந்திக்க தயாராக இருக்கிறது’ என்று கூறினார். அந்தப் பேட்டியிலேயே, ‘கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது எழுந்த 89 கோடி ரூபாய் பண வினியோக புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிற கருத்தையும் ஸ்டாலின் கூறினார்.
ஆனால் ஆர்.கே.நகரில் கடந்த முறை திமுக சார்பில் களம் இறங்கியவரான மருதுகணேஷ் அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில், ‘89 கோடி ரூபாய் பண வினியோகம் தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல், ஆர்.கே.நகர் தேர்தலை அறிவிக்ககூடாது. தேர்தல் ஆணையம் இதில் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், நீதிமன்றத்தை நாடுவோம்’ என கூறியிருக்கிறார்.
அதாவது, 89 கோடி ரூபாய் பண வினியோக புகாரில் நடவடிக்கை எடுக்கும் வரை, ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்பதே இதன் இன்னொரு வடிவம்! ஒரே வாரத்தில் திமுக-வின் நிலைப்பாடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விஷயத்தில் 89 கோடி ரூபாய் பண வினியோக புகார் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில் பதில் மனு தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், ‘பண வினியோகம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக போலீஸாருக்கு நாங்கள் அறிக்கை அனுப்பியிருக்கிறோம்’ என குறிப்பிட்டார்.
வருமான வரித்துறையின் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் ஆரம்பித்து, அவரது அமைச்சரவை சீனியர்கள் பலரது பெயர்களும் அடக்கம்! கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக போலீஸ், அடுத்த சில தினங்களில் அதில் மளமளவென நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடும் என நம்புவதற்கு இல்லை.
அந்த நடவடிக்கைக்கும், தற்போது இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதற்கும் திமுக ஏன் முடிச்சுப் போடுகிறது? இப்படித்தான் கடந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாரானது அதிமுக அரசு. அப்போது 2011 மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியல், எஸ்.டி. இட ஒதுக்கீடு, உரிய அவகாசம் கொடுக்காமல் தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி நீதிமன்றத்தை அணுகியது திமுக. அதனால் நின்று போனது உள்ளாட்சித் தேர்தல்!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அணிகளில் உச்சகட்ட குழப்பம் நிலவிய வேளையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முறையிட்டது திமுக. ஆனால் அதிமுக-வோ, ‘நீங்கள் சுட்டிக்காட்டிய பிரச்னைகளை சரி செய்து கொண்டிருக்கிறோம். வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.’ என காரணம் கூறி உள்ளாட்சித் தேர்தலை இழுத்தடித்து வருகிறது. அதே கதி இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கும் வந்துவிடுமோ? என தோன்றுகிறது.
திமுக-வின் இந்த திடீர் ‘மூவ்’-க்கான காரணம், அங்கு தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை என்பதுதான்! கடந்த முறை தேர்தல் ரத்தானதும், ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்றிய அத்தனை மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். அப்போது அவர்கள் தெரிவித்தது, ‘தேர்தல் நடந்திருந்தாலும், கொஞ்சம் வாக்குகளில்தான் நான் ஜெயித்திருப்போம். ஆர்.கே.நகரில் நம் கட்சி அமைப்பே இல்லை. அதை சரி செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டனர். அதன்பிறகு ஆர்.கே.நகர் வட்டப் பிரதிநிதிகள் வரை அழைத்து கூட்டம் போட்டார் ஸ்டாலின். அங்கு கட்சி அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
தமிழகம் முழுவதும் அதிமுக பலவீனமடைந்திருப்பதும், ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதிகரித்திருப்பதும் நிஜம்! ஆனால் அந்த வாக்குகளில் எத்தனை சதவிகிதம் திமுக-வுக்கு திரும்பும்? என்பது ஒரு கேள்வி. ஒரே ஒரு தொகுதி இடைத்தேர்தல் என்றால், ஆளும்கட்சியினர் மொத்த நிர்வாகிகளையும் அங்கே குவித்து வழக்கம்போல தங்கள் ‘சித்த்’ வேலைகளை காட்டுவார்கள்.
கடந்த முறை, சசிகலா தரப்புக்கு எதிரான மனநிலையில் டெல்லி இருந்ததால் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுத்தது. ஆனால் இப்போது ஒரு அமைச்சரே, ‘டிரம்பே நம்மை எதிர்த்தாலும், மோடி காப்பாற்றுவார்’ என பேசுகிற நிலை! கடந்த முறை அதிமுக-வின் பண பலத்தை பாதி அளவு ஈடு செய்யும் திட்டத்துடன் திமுக நிர்வாகிகள் களம் இறங்கினர். இந்த முறை அதுவும் சாத்தியம் இல்லை.
காரணம், நவம்பர் 7-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய எழுச்சிப் பயணத்தை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். அதற்கு செலவழிக்க வேண்டியதை நினைத்தே திமுக மாவட்ட நிர்வாகிகளில் இருந்து கிளை நிர்வாகிகள் வரை பீதியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை அழைத்து ஆர்.கே.நகரில் செலவு செய்ய வைப்பதும் சாத்தியமில்லை.
இப்போது இடைத்தேர்தலை நடத்துவதாக இருந்தால், எழுச்சிப் பயணத்தை நவம்பர் 7-ம் தேதி தொடங்கி நடத்த முடியுமா? என்பது சந்தேகம். அந்த தொடக்க விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ‘அப்பாய்ன்மென்ட்’ வாங்கியாகிவிட்டது. அதில் இனி மாற்றம் செய்வது சிரமம். நவம்பர் 7-ம் தேதி எழுச்சிப் பயணத்தை தொடங்கிவிட்டு, அடுத்து இரு மாதங்கள் இடைவெளி விட்டு எழுச்சிப் பயணத்தை தொடர்ந்தால் ‘எழுச்சி’ மிஸ் ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு.
இந்தப் பிரச்னைகள்தான் இப்போது இடைத்தேர்தலை திமுக விரும்பாமல் இருக்கக் காரணம்! திமுக-வின் தேர்தல் தள்ளிவைப்புக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வாய்ப்பு குறைவு. நீதிமன்றத்தில் இதில் என்ன முடிவு கிடைக்கப் போகிறது? என்பதை பார்க்கலாம்!