"கமல் மீது விழுந்துள்ள 'இந்து விரோதி' என்ற முத்திரை மாறாது", என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை திமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சியினர் கருப்பு நாளாக அனுசரித்து போராட்டங்களை நடத்தின. இதற்கு எதிர்மாறாக, பாஜக அந்நாளை கருப்பு பண எதிர்ப்பு நாளாக கொண்டாடியது.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் போராட்டங்களை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, "கருப்பு பண முதலைகளுக்குத்தான் பண மதிப்பு நீக்க நாள் கருப்பு நாள். அந்த நாள் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் அவர்களுக்கு கருப்பு நாள்தான். தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். அதனால்தான், அந்நாளை கருப்பு நாளாக அனுசரிக்கின்றனர்", என கூறினார்.
அப்போது, நடிகர் கமலாசனின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய எச்.ராஜா, ""நான் இந்து விரோதி அல்ல.', என கமலாஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், அவர் மீது விழுந்த இந்து விரோதி என்ற முத்திரை மாறாது. பகுத்தறிவு பேசுவது ஃபேன்ஸி. இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசுவது பகுத்தறிவு என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்து தீவிரவாதம்னு பேசிய கமல் ஏன் முஸ்லிம் பயங்கரவாதம் குறித்து பேசவில்லை. அதைப்பற்றியும் பேசியிருந்தால் அவரை நடுநிலைவாதி என ஒப்புக்கொண்டிருக்கலாம். பாஜக பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது.", என கூறினார்.