Why Kamal Haasan, TTV dhinakaran left from by poll battle?: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் தங்கள் தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. ஆளும் கட்சியான அதிமுக எப்படியாவது இந்த இரண்டு தொகுதிகளையும் வெற்றிகொண்டு மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை கூட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. இந்த இரண்டு தரப்புகளுக்குமே குறிப்பிடும்படியான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக உள்ள அமமுகவும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்திலும் அவர்களுடைய கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் அமமுகவும் பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவில் இரண்டு கட்சிகளும் கணிசமான வாக்குகளைப் பெற்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக 5.27 சதவீத வாக்குகளையும் மநீம 3.72 சதவீத வாக்குகளையும் பெற்றன. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இந்தளவுக்கு வாக்கு சதவீதம் பெற்றது அந்த கட்சிகளின் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இதனால், அடுத்து வரும் தேர்தல்களில் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர் அக்கட்சிகளின் தொண்டர்கள்.
இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளிட்டார். அந்த அறிக்கையில், “பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும் பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி 2021ல் ஆட்சிப் பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆட்சியிலிருந்தவர்களும் ஆள்பவர்களும் போட்டிபோடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது” என்று அறிவித்திருந்தார்.
அதே போல, அமமுகவும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையின் முடிவு கட்சித் தொண்டர்கள் இடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் தெரிவித்தனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில் “காலங்காலமாக கவர்ச்சிகரமான அரசியல் செய்ததனாலேயே, இவர்கள் பேனர் வைக்கிறேன் என்ற பெயரில் தொண்டர்களை உற்சாகத்துடன் வைத்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். அதனால், அவர்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்துவது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இடைத்தேர்தலில் கலந்துகொள்ளாததை நாங்கள் எங்களுடைய தொண்டர்களுக்கு உற்சாகக் குறைவாக பார்க்கவில்லை.
முதலில் நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை என்று சொகிறமாதிரி பொதுமக்களே இதுபோன்ற இடைத்தேர்தலில் ஆர்வம் செலுத்துவதில்லை. பொதுமக்கள் பெரியகுளம், சாத்தான்குளம், திருமங்கலம் போன்ற இடைத்தேர்தல்களை ஒரு கேம் நடக்கிறமாதிரிதான் பார்த்திருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத்தயாராக இருந்தார்கள். ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் திமுகவும் திமுக ஆட்சியில் அதிமுகவும் இடைத்தேர்தல்களைப் புறக்கணித்திருக்கிறது. காரணம் அவர்களுடைய ஆட்சியில் தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதுதான். இன்று ஏன் போட்டியிடுகிறார்கள் என்றால் நேர்மையாக நடக்காமல் வெற்றிபெற முடியும் என்று இருவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. அவர்களே அதே அஸ்திரத்தை எடுக்கத் தயாராகிவிட்டார்கள்.
கடந்த பொதுத்தேர்தலில் 39 தொகுதிகளிலும் 1 லட்சம் வாக்குகளுக்கு குறையாத வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக அடுத்த 2 மாதங்களுக்குப் பிறகு நடந்த வேலூர் தேர்தலில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றது. அதற்குள் திமுக செய்த மாபெரும் தவறு என்ன? மக்களே இந்த இடைத்தேர்தல்களை பெரிதாக எடுத்துக்கொளவதில்லை. அந்த வகையில், நாங்கள் வெறும் 4 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளிடம் பேரம் பேசி பிரதிநிதித்துவம் பெறும் நிலையில் இல்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதனால், நாங்கள் வலிமையாக பெரிய அளவில் போராட வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடும்போது, அவர்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கேமில் நாங்கள் நேரத்தை விரையம் செய்யவில்லை.
நாங்கள் அச்சப்படுபவர்களாக இருந்தால் கட்சி தொடங்கிய ஒரு ஆண்டில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்க மாட்டோம். நாங்கள் கடந்த தேர்தலில் வாங்கிய வாக்கு அளவை ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் பாராட்டியிருக்கிறார்கள். அதனால், எந்தவிதத்திலும் நாங்கள் தேர்தலைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. ஆனால், இந்த இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்றால் அந்த 2 கட்சிகளின் ஆட்டம்தான். மற்ற கட்சிகள் பாருங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள்.
அவர்களுடைய அதிகார பலம், பண பலம் இவற்றை வைத்துக்கொண்டு இடைத்தேர்தலில் காலங்காலமாக ஒரு மோசமான கேம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தலில் மாற்றுக்கட்சிகள் வெற்றி பெறுவது சாதாரணமாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மாற்றுக் கட்சி வெற்றி பெறுவது என்பது முடியவில்லை. காரணம் அந்த தேர்தலில் யார் அதிக பணம் செலவு செய்வார். அதிகாரத்துடனும் பணத்துடனும் இடைத் தேர்தலை அணுகினால் போதும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களும் இந்த இடைத்தேர்தல்கள் பெரியதாக எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அப்படி இருக்கமாட்டார்கள். அவர்கள் நம்மை ஆளப்போவது யார்? யாரை முதலமைச்சராக்க வேண்டும் என்பதைத்தான் பார்ப்பார்கள். இந்த நாணயக்குறைவையெல்லாம் பார்க்காமல் அந்தத் தேர்தலில் அவர்களை மக்கள் தண்டிப்பார்கள். அதனால், நாங்கள் 2021 தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எங்கள் தலைவரும் கட்சியும் அவர்களுக்கு மக்களுக்கு பிடித்தமானவர்களாக இருந்தாலும், எங்கள் கட்டமைப்பு அவர்களை நாங்கள் எளிதில் நெருங்கிவிட்டோமா என்று பார்த்தால் அதற்காக இன்னும் சிறிது நாங்கள் உழைக்க வேண்டியுள்ளது. அதற்கான வேலைகளைச் செய்வதற்காகத்தான் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் கலந்துகொள்ளவில்லை. அதனால், நாங்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை. இடைத்தேர்தலில் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதே சரியாக இருக்கும். நாங்கள் மற்ற கட்சிகளைப் போல சாதாரணமாக ஒரு அனுமதி வாங்கிக்கொண்டு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்திவிட்டு போகிற ஒரு வழக்கமான போராட்டக் கட்சி அல்ல எங்களுடையது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் புதியா ஆட்சியைக் கொண்டுவந்தால்தான் இப்போது உள்ள தவறுகளைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ள கட்சி எங்களுடையது. அது ஒரு நீண்ட நெடிய போராட்டம் அதற்காக நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம். அதனால், இந்த தேர்தலில் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்.
அதே போல, அமமுக தரப்பில் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, “நாங்கள் எங்களுடைய கட்சியைப் பதிவு செய்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. தேர்தலின்போது, நாங்கள் 22 சட்டமன்றத்தொகுதி 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்களுக்கு பொதுவாக ஒரு சின்னம் வேண்டு என்று கேட்டபோது நீதிமன்றத்தில் நீங்கள் ஏன் உங்களுடைய கட்சியைப் பதிவு செய்யக்கூடாது என்று கேட்டாரகள். அப்போதே நாங்கள் உறுதியளித்து தேர்தல் முடிந்தபிறகு கட்சியையும் பதிவு செய்தாகிவிட்டது. அதன் பிறகு எங்களுக்கு முதலில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் எங்களுடைய கட்சி பெயருக்கு, கொடிக்கு விளக்கம் கேட்டார்கள். அதற்குண்டான எல்லா விளக்கங்களையும் எங்களுடைய வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாகிவிட்டது. அதற்குப் பிறகு, செய்தித்தாளில் அறிவிப்பு அளிக்க வேண்டும். அதையும் கடந்த ஜூன் மாதமே கொடுத்துவிட்டோம். உண்மையில் ஜூலை மாதம் எங்கள் கட்சியைப் பதிவு செய்து சின்னம் கொடுத்திருக்க வேண்டும். இப்போது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா என்று மீண்டும் ஒரு அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இது மாதிரி எங்களுடைய கட்சிப் பதிவு பொது சின்னம் விவகாரம் தள்ளித் தள்ளிப் போகும்போது என்ன செய்வது.
இதையெல்லாம் தவிர்த்து நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கு தனித்தனியாக இரண்டு சுயேட்சை சின்னம்தான் தருவார்கள். நேரமும் ரொம்ப குறைவாக உள்ளது. அதனால், நீதிமன்றத்துக்கு சென்று சின்னம் வாங்குவது என்பது நடக்ககூடியதாக இல்லை. மீண்டும் 2 தொகுதிகளுக்கு 2 சின்னங்களைப் பெற்று அமமுக வாக்கைப் பெறுவது என்பது சிக்கல் உள்ளது. ஏனென்றால், ஆர்.கே.நகரில் அமமுக சின்னம் தொப்பி இருந்தது. பிறகு தொப்பி கேட்டால் இல்லை என்று குக்கர் சின்னம் கொடுத்தார்கள். குக்கர் சின்னம் வாங்கி வெற்றிபெற்றோம். வெற்றி பெற்ற சின்னத்தை மீண்டும் கேட்டால் கிடைக்கவில்லை. பிறகு நீதிமன்றம் சென்றுதான் பரிசுப்பெட்டி சின்னம் வாங்கினோம். மறுபடியும் வேறு வேறு சின்னம் நிற்க வேண்டாம் என்று நாங்கள் நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து எங்கள் தலைவருடன் கலந்துபேசி நாம் இனிமேல் நம்ம கட்சியைப் பதிவு செய்துவிட்டு இதுதான் சின்னம் என்று உறுதிசெய்துவிட்டு அதன்பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் எங்கள் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வேலூர் மக்களவைத் தேர்தலிலும் இந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். மற்றபடி இதில் வேறொன்றுமில்லை.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.