ட்விட்டரில் மட்டுமே கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்துவந்த கமல்ஹாசன், திடீரென களத்திற்கே நேரடியாகச் சென்று மக்களிடம் குறை கேட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
‘வடசென்னைக்கு ஆபத்து’ என கோசஸ்தலையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றியும், நெல்லூர் மற்றும் வடசென்னை மின் நிலையங்கள் ஆற்றில் கொட்டும் கழிவுகள் பற்றியும் ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார். இதனால், மகிழ்ந்த எண்ணூர் துறைமுகப் பகுதி மற்றும் சாம்பல் குளத்தைச் சேர்ந்த மக்கள், அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
கமல்ஹாசனும் பதிலுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இன்று காலை அந்த இடங்களைச் சென்று பார்வையிட்டதோடு, அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகத்தின் கழிமுகப் பகுதிக்கு வந்த கமல்ஹாசன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். மின் நிலையங்களில் இருந்து கழிவுகள் கொட்டப்படும் இடங்களையும் பார்வையிட்ட கமல்ஹாசன், செப்பாக்கம், காட்டுக்குப்பம், சால்ட் பங்களா ஆகிய இடங்களில் மக்களையும் சந்தித்து, அவர்கள் சொன்ன குறைகளைக் கேட்டறிந்தார்.
எத்தனையோ பிரச்னைகள் குறித்து கருத்து மட்டுமே தெரிவித்துவந்த கமல்ஹாசன், திடீரென வடசென்னையில் களமிறங்கியது எப்படி? ‘சேவ் எண்ணூர் க்ரீக் கேம்பெய்ன்’ அமைப்பை நோக்கிக் கைகாட்டுகிறார்கள் மக்கள்.
எண்ணூர் கழிமுகத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அமைப்புதான் கமல்ஹாசனை அணுகி, இந்தப் பிரச்னை பற்றிப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் நேற்று ட்விட்டரில் அதுபற்றி பதிவிட்டார் கமல். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, இன்று காலை நேரடியாக அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு பிரச்னையின் தீவிரத்தை அறிந்து கொண்டுள்ளார்.
கமல்ஹாசனிடம் இந்த விஷயத்தைக் கொண்டுபோனது ஏன்? என எண்ணூர் க்ரீக் சேவ் கேம்பெய்ன் அமைப்பைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமனிடம் ‘ஐஇ தமிழ்’காக பேசினேன். “கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்னை குறித்து மீனவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், அரசு கண்டுகொள்வதே இல்லை. பிரபலங்கள் பேசினாலாவது அரசு இதைப்பற்றி கவனத்தில் கொள்ளும் என்பதற்காகவே கமல்ஹாசனை சந்தித்து, பிரச்னை பற்றி எடுத்துக் கூறினோம். அவர் நேரிலேயே வந்தது பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இதுகுறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினரான கனிமொழி, பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்னை பற்றிப் பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.
எண்ணூர் க்ரீக் சேவ் கேம்பெய்ன் அமைப்பினர் நினைத்தபடியே கமல்ஹாசன் பார்வையிட்ட பிறகு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், ‘ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.