விஜய்யின் ‘மெர்சல்’ பட விவகாரம், நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தைக் கையிலெடுத்த பாஜக கூட இவ்வளவு பெரிய விஷயமாக இது ஆகும் என நினைக்கவில்லை அல்லது இவ்வளவு பெரிய பிரச்னையாக வேண்டும் என்றுதான் கையில் எடுத்ததா எனத் தெரியவில்லை. ஆனாலும், தென்னிந்தியாவில் மட்டுமே பிரபலமான விஜய்யை, வடஇந்தியாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது ‘மெர்சல்’ விவகாரம்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவரான ராகுல் காந்தி முதற்கொண்டு, பிரபலமாக இருக்கிற அல்லது பிரபலமாகத் துடிக்கிற எல்லோருமே ‘மெர்சல்’ பற்றி கருத்து சொல்லிவிட்டார்கள். ஆனால், பாஜக உள்பட எல்லோருமே ஒருவரின் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர், ரஜினிகாந்த்.
எல்லா விஷயத்திலும் கருத்து சொல்பவர் அல்ல ரஜினி. இன்னும் சொல்லப்போனால் என்ன நடந்தால் எனக்கென்ன என்று வாய்மூடி மெளனமாகவே இருப்பதுதான் ரஜினியின் வழக்கம். ஆனால், பேசியே ஆட்சியைப் பிடித்த தமிழகத்தில், அரசியல் ஆசையில் இருப்பவர் பேசாமல் இருக்கலாமா? ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அமைதியாகவே இருக்கிறார்.
சில படங்களைப் பார்த்து, ‘நல்லா இருக்கு’ என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளும் ரஜினி, நதிகளை இணைக்க மிஸ்டு கால் மட்டும் கொடுக்கச் சொன்னார். அதைப் பார்த்தவர்கள், ‘இதுக்கு மட்டும் கத்துதா இந்தப் பல்லி?’ என்று ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். ஆனால், அதன்பிறகு எவ்வளவோ பிரச்னைகள் வந்தாலும், வாயை இறுக மூடி வைத்திருக்கிறார். எனவே, எதுவும் பேசாத ரஜினியைவிட, எதையாவது பேசும் கமல்ஹாசனே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதெல்லாம் சரி, நாடே பேசும் ‘மெர்சல்’ பற்றி ரஜினி ஏன் பேசவில்லை? ரஜினி அரசியலில் இறங்குவது எப்போது என்று தெரியாவிட்டாலும், அரசியலில் இறங்குவது உறுதியாகிவிட்டது. எந்தக் கட்சியிலும் இணையாமல் ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்படவே ரஜினி முடிவு செய்துள்ளார். அவரை பாஜகவும் தனியாக விட்டுவிடாது. எனவேதான் பாஜக எதிர்க்கும் ‘மெர்சல்’ குறித்து ரஜினி வாய் திறக்காமல் இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.