பேரறிவாளனுக்கு இல்லாத நிபந்தனை சசிகலாவுக்கு ஏன்? பரபரப்பு பின்னணி

வி.கே.சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு கொடுத்த கடும் நெருக்கடிகளே காரணம் என தெரிய வந்திருக்கிறது.

By: Updated: October 7, 2017, 09:42:45 AM

வி.கே.சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு கொடுத்த கடும் நெருக்கடிகளே காரணம் என தெரிய வந்திருக்கிறது.

வி.கே.சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே விதிமுறைகளை மீறியதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. எனவே அவரது நெருங்கிய உறவினர்கள் இறந்தபோதுகூட சசிகலா பரோல் கேட்கவில்லை.

இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரை அருகிலிருந்து கவனிக்க பரோல் கேட்டு விண்ணப்பித்தார் சசிகலா. இது தொடர்பாக தமிழக அரசு கருத்தை கேட்டு கர்நாடக சிறைத்துறை கடிதம் எழுதியது. சில பல ஆலோசனைகளுக்கு பிறகு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தது.

அதன்பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் நேற்று பிற்பகலில் சசிகலாவை 5 நாட்கள் பரோலில் விடுவித்தது கர்நாடக சிறைத்துறை. கர்நாடக சிறைத்துறை விதித்துள்ள 4 நிபந்தனைகள் வருமாறு:

v.k.sasikala, tamilnadu, karnataka, tamilnadu government, m.natarajan, parole for v.k.sasikala

1.இந்த எமர்ஜென்சி பரோல் காலத்தில் உங்கள் கணவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு மட்டுமே நீங்கள் செல்லலாம். தவிர, நீங்கள் பரோல் விண்ணப்பத்தில் கொடுத்திருக்கும் முகவரியில் மட்டுமே (தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லம்) தங்கியிருக்க வேண்டும்.

2. இந்த எமர்ஜென்சி பரோல் காலத்தில் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ நீங்கள் விசிட்டர்களை சந்திப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

3.இந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது. கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

4. எந்த ஒரு மீடியாவுடனும் இந்த காலகட்டத்தில் பேசக்கூடாது.

பரோல் காலகட்டமான அக்டோபர் 7 முதல் 11-ம் தேதி வரை இந்த நிபந்தனைகளை கர்நாடக சிறைத்துறை விதித்திருக்கிறது. பொது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது, மீடியாவை சந்திக்ககூடாது ஆகிய 3 நிபந்தனைகள் அனைத்து பரோல் கைதிகளுக்கும் விதிக்கப்படுபவைதான். ஆனால் இரண்டாவது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ள, ‘விசிட்டர்களை சந்திக்ககூடாது’ என்கிற நிபந்தனைதான் சசிகலாவுக்கு தமிழக அரசு வைத்த ‘செக்’ என்கிறார்கள்.

அதாவது, சசிகலா ஒரு போன் போட்டால், அமைச்சரவை சீனியர்கள் சிலரே அங்கு வரிசை கட்டி நிற்க தயாராக இருப்பதாக ஒரு தகவல் உண்டு. அது நடந்தால் ஆட்சிக்கும், இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கும் பெரும் தர்ம சங்கடம் ஆகும். அதனால்தான் அப்படியொரு கூடுதல் நிபந்தனையை விதிக்கும் அளவுக்கு கர்நாடக சிறைத்துறைக்கு சில தகவல்களை தமிழக அரசு அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்.

அதாவது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சசிகலா மீது கோபத்தில் இருப்பதாகவும், இந்த தருணத்தில் அவரை பார்வையாளர்கள் சந்தித்தால் தேவையற்ற அசம்பாவிதங்கள் நேர்ந்துவிட வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே விசிட்டர்களை தடை செய்து நிபந்தனை விதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளன் அண்மையில் ஒரு மாதம் பரோலில் வந்தார். மீண்டும் ஒரு மாதம் அவரது பரோல் நீடிக்கப்பட்டது. அவருக்கு இதேபோல விசிட்டர்களை தடை செய்து நிபந்தனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள், ஈழ ஆதரவாளர்கள் எந்தத் தடையும் இல்லாமல் பேரறிவாளனை சந்தித்து திரும்பினர். பேரறிவாளன் சொல்ல விரும்பிய விஷயங்களை அவரது தாயார் அற்புதம் அம்மாள் மீடியா முன்பு வைக்கவும் தவறவில்லை.

சசிகலா நேற்று (6-ம் தேதி) இரவு சென்னை வந்து சேர்ந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரனும் மேற்படி கடும் நிபந்தனைகளுக்கு தமிழக அரசே காரணம் என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. பரோல் நிபந்தனைகளை சசிகலா ஒழுங்காக பின்பற்றுகிறாரா? என கண்காணிக்க கர்நாடக சிறைத்துறை அதிகாரி ஒருவரும் உடன் வந்திருக்கிறார். தமிழக போலீஸிலும் இதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பரோல் விதிமுறைகளை அவர் மீறினால் உடனடியாக கர்நாடக சிறைத்துறைக்கு தகவல் தெரிவித்து, பரோலை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Why strict parole conditions for v k sasikala backround reasons

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X