சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவை தொடர்பாகவே இந்த ஐ.டி. ரெய்டு என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வி.கே.சசிகலாவின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று (நவம்பர் 9) ஒரே நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பரவலான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
அதிமுக.வின் உள்கட்சிப் பூசல்களை அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ‘மத்திய அரசின் தூண்டுதலே இந்த நடவடிக்கைக்கு காரணம்’ என்றார்.
இந்தச் சூழலில் இந்த ‘மாஸ் ரெய்டு’க்கான காரணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சசிகலா பெயரில் பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் என 4 போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டி.வி.க்கு தொடர்புடையதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.