நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வராதது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக ஏன் கொண்டு வரவில்லை என பரவலாக எழுப்பப்படும் கேள்விக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக ஏன் கொண்டு வரவில்லை என பரவலாக எழுப்பப்படும் கேள்விக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்” என முறையிட்டதை தொடர்ந்து, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் பொருட்டு, ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் துரைமுருகன் தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆளுநரை சந்தித்தனர். அதேபோல், திமுக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனைத் தொடர்ந்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை சேர்த்து ஆளுங்கட்சிக்கு எம்எல்ஏ-க்கள் 119 பேரின் எதிர்ப்பு உள்ளது. பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது. இதனை ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். எங்களது இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றார்.

இதையடுத்து, “ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது அல்லது வெற்று மிரட்டல்கள் விடுவதற்குப் பதிலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வரலாம். அதற்கு ஏன் அவர் பயப்படுகிறார்?” என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியிருந்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக ஏன் கொண்டு வரவில்லை என பரவலாக எழுப்பப்படும் கேள்விக்கு விளக்கமளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். எந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாத அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. எனவே தான் ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

மேலும், ஹெச்.ராஜாவின் விமர்சனம் குறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சட்ட அடிப்படை விதிகள் தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்பது வருத்தமாக உள்ளது என்றார்.

சட்டப்பேரவை கூடினால் மட்டுமே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும் என விளக்கம் அளித்த ஸ்டாலின், பேரவையை கூட்ட உத்தரவிடும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. எனவே, ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம். ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் நல்ல முடிவை அவர் அறிவிப்பார் என நம்புகிறோம் என்றார். அதேபோல், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மத்தியில் இருக்கும் அரசு மதவாத கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாக விமர்சித்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why the dmk does not bring no motion confidence mk stalin

Next Story
விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள்: எங்களை மீறி எந்த முடிவும் தமிழக அரசு எடுக்கக்கூடாது – ஹைகோர்ட்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com