Pongal rekla race in Coimbatore : கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 14,15 மற்றும் 17 தேதிகளில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் முறையே ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய விளையாட்டுகள் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் போது ஊரெங்கும் களைகட்டும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். மதுரைக்கு எப்படி ஜல்லிக்கட்டோ அப்படியே தான் கொங்கு மண்டலத்திற்கு ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டி பந்தயம். ஆனால் இம்முறை ஜல்லிக்கட்டிற்கு கிடைத்த அனுமதி ரேக்ளாவிற்கு கிடைக்கவில்லை. 10 நாட்கள் போட்டிகளாக நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று மற்றும் அனுமதி போன்ற பிரச்சனைகள் காரணமாக ரேக்ளா போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவையும் ரேக்ளா பந்தயமும்
”சாதி மத பேதம்னு ஒன்னும் இல்ல… இந்த பந்தயத்துல கலந்துக்குற தமிழன் அவ்வளவு தான். எங்கப்பா இந்த பந்தயத்துல கலந்துக்கிட்டாரு. அவருக்கு அப்பறமா நான் கலந்துக்குறேன்” என்று கூறுகிறார் கோவையை சேர்ந்த முகமது அசாத் (25). “என்னுடைய மாடு பேரு வெள்ளையன். குழந்தையா இருக்கும் போது அவனை நான் வளக்க ஆரம்பிச்சேன். இப்போ அவனுக்கு ரெண்டு வயசாகுது. இன்னும் பல்லு போடல… அவனோட கூட்டு சேர்ந்து 4 ரேஸ்ல கலந்துகிட்டேன். மூணு இடத்துல பரிசு வாங்கிக் கொடுத்துருக்கான்…” என்றும் பெருமிதத்தோடு தன்னுடைய ரேக்ளா மாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார் அசாத். “பொள்ளாச்சில காங்கேயம் மாடுகள் அதிகமாக பயன்படுத்தப்படும். இங்க கோயமுத்தூர்ல லம்பாடி, மலையா மாடுகள அதிகமாக நாங்கள் பந்தயத்துக்கு பயன்படுத்துகிறோம்” என்று அசாத்.
ரேக்ளா தமிழகத்தில் மட்டுமின்றி பெரும்பாலான இந்திய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் கொங்கு பகுதியில் ரேக்ளா வருடம் முழுவதும் நடத்தப்படும் போட்டிகளாகவே மாட்டுவண்டிப் போட்டிகள் உள்ளது. இந்த ஆண்டு பொங்கலின் போது ரேக்ளா நடத்தப்படாமல் இருப்பது வருத்தத்தையே தருகிறது என்று கூறுகின்றனர் கொங்கு மண்டலத்தினர்.
கோவையில் குறிப்பாக பொள்ளாச்சி பகுதியில் பொங்கல் காலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நிலைமை என்ன என்பதை அறிய முயன்றது தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.
”இந்த 20-30 வருசங்கள்ல தான் கோயமுத்தூர்ல அளவுக்கு அதிகமா ரேக்ளா ரேஸ் நடக்குது, கண்ணு… முன்னாடியெல்லாம் ரேக்ளா ரேஸ் பாக்கணும்னாலும் சரி, கலந்துக்கணும்னாலும் சரி கேரளாவுக்கு தான் போகணும்… வடக்கால ரொம்ப தூரம் வரைக்கும் ரேக்ளா ரேஸ் நடந்தது” என்று நம்மிடம் பேச துவங்கினார், பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் சிவன்மலை(47).
”இந்த வருஷம் ரேக்ளா பந்தயம் பொங்கலுக்கு ஒன்னும் நடக்காது போல இருக்கு… கொரோனா தொற்று ஒரு பக்கம்… கட்டுப்பாடுகள் மறுபக்கம்.. ஜல்லிக்கட்டுன்னா கிட்டத்தட்ட ஒரு உள் அரங்கத்துல நடக்குற நிகழ்வு மாதிரி தான். அதனால தான் பாக்குறதுக்கு இவ்வளவு பேரு, பங்கேற்குறதுக்கு இவ்வளவு பேரு மட்டும் இருந்தா போதும்னு அரசாங்கம் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிஞ்சது. ஆனால் ரேஸ் அந்த மாதிரியில்ல.. ரோட்ல நடக்குது… துள்ளி குதுச்சு ரொம்ப தூரம் காளைகள் போற இந்த பந்தயத்தை இத்தனை பேரு தான் பாக்கணும்னு சொல்ல முடியாதுல… ஆனா அரசாங்கம் நெனச்சா அனுமதி தரலாம்… மதுரைல நடக்குற மாதிரி 5 கி.மீ மாட்டு வண்டி பந்தயம் எல்லாம் இங்க நடக்காது. அதிகபட்சமே 300 மீட்டர் போட்டிகள் தான்” என்றார் அவர்.
ரேக்ளாவிற்காக வளர்க்கப்படும் மாடுகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறது?
ரேக்ளாவில் கலந்து கொள்ளும் 100-ல் 90 மாடுகள் காங்கேயம் இன மாடுகளாகவே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக லம்பாடி, ஹல்லிகர் (Hallikar) மற்றும் பூர்ணி இனக்காளைகள் ரேக்ளா பந்தயங்களில் பங்கேற்க வைக்கப்படுகிறது. ஜல்லிகட்டுக்கு எப்படி தனியாக காளைகள் வாங்கி வளர்க்கப்படுகிறதோ அவ்வாறே ரேக்ளா பந்தயங்களுக்கும் மாடுகள் வாங்கி வளர்க்கப்படுகின்றன.
தாடை சின்னதாக இருக்க வேண்டும். கனமாகி கீழே தொங்கும் மாடாக இருக்க கூடாது. வால் சிறியதாகவும், தோல் மென்மையாகவும் இருக்க வேண்டும். கண் விழிகள் கூர்மையாக இருக்க வேண்டும் இந்த அம்சங்கள் இருந்தால் மட்டுமே அந்த கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு ரேக்ளாவிற்காக வளர்க்கப்படுகிறது. உடல் எடை ஏறாமல் எப்போதும் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் காளைகள் இருக்க வேண்டும். உடல் எடை ஏறிவிடாமல் அதனை பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடை கூடும் போது மாடுகள் வெகு தூரம் ஓடாது என்று ரேக்ளா பந்தயத்திற்கான மாடுகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது நம்மிடம் கூறினார் பிரபாகரன்.
பந்தயத்திற்கு காளைகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது?
பல் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரிய மாடு, நடு மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மாடுகள் பிரிக்கப்பட்டு அவைகள் பந்தயத்திற்கு விடப்படுகிறது. பூஞ்சிட்டு மற்றும் சின்னமாடு போன்றவையின் பல் எண்ணிக்கைகள் மிகவும் குறைவாகவே இருக்கும். 2 பல் வரை இருக்கும் மாடுகள் 200 மீட்டர் பந்தயத்திற்கு தேர்வு செய்யப்படும். 4 பல்கள் இருக்கும் மாடுகள் நடுமாடு என்று அழைக்கப்படும். பால் பற்கள் உதிர்ந்து கடைவாய் பற்கள் முளைத்த மாடுகள் பெரிய மாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை பொதுவாக 300 மீட்டர் பந்தயங்களில் பங்கேற்க வைக்கப்படுகின்றன.
கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிய காரணங்களால் முறையாக ரேக்ளா போட்டிகள் நடைபெறவில்லை. திடீரென போட்டிகள் அறிவித்தால் 500 ஜோடிகள் வரை கலந்து கொள்ள வருகின்றன. எனவே தான் இம்முறை பூஞ்சிட்டு மற்றும் சின்னமாடுகள் பங்கேற்கும் ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதித்திருக்கின்றோம் என்று தெரிவித்தார் பிரபாகரன். பொள்ளாச்சியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு, பாலக்காடு மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடுகள் வருகின்றன. நானும் என்னுடைய தம்பியும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ரேக்ளா போட்டிகளில் பங்கேற்றிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
மீட்டர் ரேஸ்கள்ள் பொதுவாக பொள்ளாச்சி, பழனி, வெள்ளகோவில், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் ஏதும் இல்லாத பட்சத்திலும் ரேக்ளா பந்தயங்களுக்காக மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் ரேக்ளா தலைமை சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி போட்டிகள் நடத்த பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாலை கடித்தல் மற்றும் தார்முள் குச்சி ஆகியவற்றை பயன்படுத்தி வண்டியை வேகமாக செலுத்தும் முறைகள் தற்போது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ரேக்ளா வண்டிகள் எங்கே தயாரிக்கப்படுகிறது?
தமிழக, கேரள எல்லைகளில் அமைந்திருக்கும் மீனாட்சிபுரம் பகுதியிலும், உடுமலைப்பேட்டை, கரட்டுமடம், வீரப்பனூர் போன்ற பகுதிகளிலும் ரேக்ளா வண்டிகள் தயாரிக்கும் பணிகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. புதிய வண்டிகள் என்றால் அது ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார் மற்றொரு ரேக்ளா பந்த்ய வீரர் பிரகாஷ்.
பொதுவாகவே தேக்குமரத்தில் தான் ரேக்ளா பந்தய வண்டிகள் செய்யப்படுகிறது. வண்டிக்காக வெட்டப்படும் தேக்குகள் முன்பே தேர்வு செய்யப்பட்டு வெட்டப்பட்டு காய வைக்கப்படும். ரேக்ளா போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் பழைய வண்டிகளை வாங்கவும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பழைய வண்டிகள் இப்பவும் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்றார் ரேக்ளா வண்டிகளை வாங்கி விற்பனை செய்யும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ரமேஷ்.
கோவையில் வாளையாறு, நஞ்சுண்டாபுரம் மற்றும் பேரூர் ஆகிய பகுதிகளில் ரேக்ளா பந்தய வண்டிகள் தயாரிக்கப்படுகின்றன.இரட்டை மாடு, ஒற்றை மாடு மற்றும் குதிரை பந்தயங்களுக்கு பயன்படுத்தும் வண்டிகளை சவாரி, ஒத்தமாட்டு வண்டி, தட்டா என்று அழைக்கின்றனர் பந்தயக்காரர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.