Advertisment

அப்துல் கலாம் விழாவில் தம்பிதுரைக்கு ஏன் இடமில்லை?

விழாவில் பங்கேற்க வெங்கையாவுக்கும், நிர்மலா சீத்தாராமனுக்கும் இருந்த தகுதி தம்பிதுரைக்கு ஏன் இல்லாமல் போனது? என்பதற்கு யாரிடமும் விடை இருப்பதாக தெரியவில்லை.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cauvery Issue, Thambidurai Met PM Narendra Modi, MP's Resignation

Cauvery Issue, Thambidurai Met PM Narendra Modi, MP's Resignation

அப்துல் கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு இடம் கொடுத்த மத்திய அதிகாரிகள் தம்பிதுரையை புறக்கணித்தது ஏன்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisment

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 27-ல் இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த மணி மண்டபத்திற்காக மூன்றரை ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கி கொடுத்தது. மணிமண்டபத்தையும் மாநில அரசே கட்டியிருக்க முடியும். ஆனாலும் கலாமின் தேசிய முக்கியத்துவம் கருதி, மத்திய அரசு அந்தப் பணியை செய்ய விரும்பியது.

அதன்படி கலாம் பணியாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை வளர்ச்சி நிறுவனம் சார்பில் சுமார் 15 கோடி ரூபாயில் இந்த மணிமண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளையும் அந்தத் துறை அதிகாரிகளே முன்னின்று செய்தார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்த விழாவுக்கான விளம்பரங்களை மத்திய அரசு சார்பில் நாளிதழ்களில் வெளியிட்டனர். அதன்பிறகே மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு, இந்த விழாவில் யார், யார் கலந்துகொள்கிறார்கள் என்கிற விவரமே தெரிய வந்திருக்கிறது.

பொதுவாக மாநிலங்களில் பிரதமர் பங்கேற்கும் முக்கிய விழாக்களில் மாநில முதல்வருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்புவிழா விளம்பரங்களில் கலாம் படத்தை தவிர்த்து மோடி படம் மட்டுமே இடம் பெற்றது. மணி மண்டபத்தை மோடி திறந்து வைப்பதாகவும், கவர்னர் வித்யாசாகர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், அந்த மாவட்டத்தை சேர்ந்தவரான அமைச்சர் மணிகண்டன், தொகுதி எம்.பி. அன்வர்ராஜா ஆகியோர் முன்னிலையில் விழா நடப்பதாகவும் விளம்பரம் இருந்தது. முதல்வருக்கு தனிப்பட்ட எந்த முக்கியத்துவமும் இல்லாதது மட்டுமின்றி, கவர்னர் வித்யாசாகர்ராவையும் விழாவில் இணைத்துக்கொண்டு முதல்வரின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதாக மாநில அரசு மட்டத்தில் புலம்பல்கள் கேட்கின்றன.

புரொட்டகால் அடிப்படையில், மாநில ஆளுனருக்கு அடுத்த இடத்தில்தான் முதல்வர் வருவார். ஆனால் இதுபோல அரசு விழாக்களில் கவர்னர்கள் பங்கேற்காமல் முதல்வருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒதுங்கிக் கொள்வதுண்டு. ஆனால் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்வர் எடப்பாடிக்கு இணையாக பிரதமரின் வலதுபுறத்தில் அமர்ந்தார். மணிமண்டபம் திறப்பு விழா அடிக்கல்லிலும் பிரதமரின் பெயருக்கு அடுத்தபடியாக கவர்னரின் பெயரை பெரிதாக போட்டிருந்தார்கள். முதல்வரின் பெயர், அதைவிட சின்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெயருக்கு இணையாக இருந்தது.

தமிழகத்தை சேர்ந்த ஒரே மத்திய அமைச்சரும், தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஒரே எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் முக்கியப் பங்காற்றியிருக்க வேண்டும். ஆனால் அவரைவிட வெங்கையா நாயுடுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வரவேற்புரை ஆற்றும் வாய்ப்பை வழங்கினர்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் வெங்கையா நாயுடு, தற்போதைய சூழலில் ஒரு எம்.பி. மட்டுமே! எந்த அடிப்படையில் அவருக்கு இந்த முக்கியத்துவம் என விசாரித்தால், ‘கலாம் மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதற்கான பொறுப்பை வெங்கையாவிடம்தான் மோடி ஒப்படைத்தார். அதற்காகவே இந்த முன்னுரிமை’ என்கிறார்கள் மத்திய அதிகாரிகள் வட்டாரத்தில்! இதேபோல கவர்னருக்கும் முதல்வருக்கும் அடுத்த முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெற்றதும் பலருக்கும் ஆச்சர்யம்!

நிர்மலா சீத்தாராமனின் பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும், ஆந்திராவில் செட்டில் ஆனவர்! கர்நாடகா மாநிலத்தில் இருந்தே ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அவர். மத்திய அமைச்சர் ஆகும் முன்புவரை தமிழக அரசியலில் எந்த வகையிலும் அவர் தலையிட்டதில்லை.

ஆனால் அண்மையில் ஜி.எஸ்.டி. அமுலானதும் தமிழ் சேனல்களில் முழு நேரமும் விவாதங்களில் உட்கார்ந்து, மத்திய அரசை பாதுகாக்கும் விதமான வாதங்களை வைத்துக் கொண்டிருந்தார். அப்போதே அவரது பார்வை தமிழக அரசியலை நோக்கி திரும்பிவிட்டதாக பேச்சு இருந்தது. ஜி.எஸ்.டி. விவகாரமாவது, அவரது துறை (வர்த்தகம்) சம்பந்தப்பட்டது. ஆனால் அப்துல் கலாம் மணிமண்டபத்தை அமைத்திருக்கும் பாதுகாப்புத் துறை, அவருடன் தொடர்புடையது அல்ல. ஆக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்ற அடிப்படையிலேயே இந்த விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இவர்களையெல்லாம் சுற்றி வளைத்து காரணங்களைச் சொல்லி விழாவுக்குள் நுழைத்த மத்திய அதிகாரிகள், கேபினட் அந்தஸ்தில் உள்ள மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரையை இந்த விழாவுக்கு அழைக்காதது இன்னொரு அதிர்ச்சி! நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரைவிட, புரொட்டகால் அடிப்படையில் தம்பிதுரைக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணனைப் போல தமிழகத்திலேயே போட்டியிட்டு ஜெயித்தவர் அவர். விழாவில் பங்கேற்க வெங்கையாவுக்கும், நிர்மலா சீத்தாராமனுக்கும் இருந்த தகுதி தம்பிதுரைக்கு ஏன் இல்லாமல் போனது? என்பதற்கு யாரிடமும் விடை இருப்பதாக தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தலையொட்டி அ.தி.மு.க. அம்மா அணி முடிவு எடுப்பதற்கு முன்பு, பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்தார் தம்பிதுரை. இப்படி வெளிப்படையாக தன்னை சசிகலா ஆதரவாளராக அவர் காட்டிக்கொண்டது குறித்து ஓ.பி.எஸ். அணி டெல்லியில் போட்டுக் கொடுத்ததாக ஒரு தகவல் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் தம்பிதுரை புறக்கணிக்கப்பட்டதாக விவரமறிந்த சிலர் குறிப்பிடுகின்றனர். இதைவிட முக்கியமான காரணம், எது நடந்தாலும் அதை தட்டிக்கேட்கும் நிலையில் எடப்பாடியோ, தம்பிதுரையோ இல்லை என்பதுதான்! இந்த நிலையில் இவர்கள் தொடர்வதால், இவர்களுக்கு எந்த அவமானம் நேர்ந்தாலும் அதைப்பற்றி மக்களும் கவலைப்படுவதாக இல்லை.

Pon Radhakrishnan Deputy Speaker Thambidurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment