தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் வீழ்த்தப்பட்ட முழுப் பின்னணி தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இந்த நடவடிக்கை காங்கிரஸுக்கு உதவுமா? என்கிற கேள்வியும் இருக்கிறது.
திருநாவுக்கரசர், தமிழ்நாடு அரசியல் களத்தில் மூத்த தலைவர்களில் ஒருவர். எம்.ஜி.ஆர். ஆட்சியில் துணை சபாநாயகராகவும், பின்னர் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தவர். பின்னாளில் பாஜக.வில் இணைந்து வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
2009-ல் காங்கிரஸுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனுன் இணக்கமான உறவு கொண்டவர் திருநாவுக்கரசர். அந்த நட்பை அவர் பேணுகிற விதமும் அலாதியானது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு களத்தில் சற்று உந்துதலாக இருந்தது உண்மையென்றால், திருநாவுக்கரசரின் தலைமை இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸுக்கு சற்றே இணக்கத்தை அதிகப்படுத்தியது. திமுக- திருநாவுக்கரசர் உறவு சொல்லும்படி இல்லை என்பது நிஜம்.
இந்தச் சூழலில் திருநாவுக்கரசரை மாநிலத் தலைவர் பதவியில் மாற்ற காங்கிரஸில் உள்ள இதர கோஷ்டிகள் கங்கணம் கட்டின. தொடக்கத்தில் இது தொடர்பாக பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார் திருநாவுக்கரசர். ஆனால் 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநில தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருநாவுக்கரசர், ‘நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் எனது தலைமையில்தான் காங்கிரஸ் சந்திக்கும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மேலிட நிர்வாகிகள் மற்றும் மாநில காங்கிரஸின் இதர கோஷ்டி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ராகுல் காந்தியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திருநாவுக்கரசர் இப்படி பேசியது, மேலிடப் பார்வையாளர் மூலமாகவே தலைமைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இன்னொரு நிகழ்வு, சில வாரங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் பொறுப்பில் இருப்பவர் என்ற அடிப்படையில், ப.சிதம்பரம் தரப்பு அதற்காகவே ஏற்பாடு செய்த கூட்டம் அது.
அந்தக் கூட்டத்தை மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் புறக்கணித்தார். இதுவும் புகாராக மேலிடத்திற்கு போனது.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து திருநாவுக்கரசரை டெல்லிக்கு அழைத்து, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி தேசிய செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி ராகுல் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரசர், ஏற்கனவே தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்துதான் மாநிலத் தலைவர் பதவிக்கு தான் மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டியதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தன்னை மாற்றுவது குறித்து திருநாவுக்கரசர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், வேறு பதவி இப்போது தேவையில்லை என குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதையடுத்தே ப.சிதம்பரம் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரியை மாநிலத் தலைவராகவும், வசந்தகுமார், மயூரா ஜெயகுமார், தேனி ஜெயகுமார், விஷ்ணுபிரசாத் ஆகிய நால்வரை செயல் தலைவர்களாகவும் நியமித்து மேலிடம் நேற்று (பிப்ரவரி 3) அறிவிப்பு வெளியிட்டது.
புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ‘திருநாவுக்கரசருக்கான இடம் காங்கிரஸில் எப்போதும் இருக்கும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கே.எஸ்.அழகிரி தலைவர் ஆனதன் மூலமாக வருகிற தேர்தலில் தமிழகத்தில் ப.சிதம்பரத்தின் பிரசாரம் முக்கிய இடம் பெறும். இது காங்கிரஸ் கூட்டணிக்கு பலம் சேர்க்கலாம்.
அதேசமயம் தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் திருநாவுக்கரசரால் நியமிக்கப்பட்டவர்கள். ஏனைய நிர்வாகிகளும்கூட ஈ.வி.கே.எஸ். அணியை சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி கே.எஸ்.அழகிரியை அனுசரிக்கப் போகிறார்கள்? என்பதைப் பொறுத்தே கட்சியின் செயல்பாடு இருக்கப் போகிறது.
தவிர, ஒரு மாநிலத் தலைவர் இருந்த தருணங்களிலேயே காங்கிரஸில் எந்த முடிவையும் சுலபத்தில் எடுக்க முடியாது. இனி ஒரு மாநிலத் தலைவர், 4 செயல் தலைவர்கள் இணைந்து முக்கிய முடிவுகளை எப்படி ஒருமுகமாக எடுப்பார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.
செயல் தலைவர்கள் நால்வரும் கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்தான். அதேசமயம் நால்வருமே காங்கிரஸில் தனித்தன்மை வாய்ந்த தலைவர்கள். இப்படி 5 தலைவர்களை அனுசரித்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிப்பது அவ்வளவு சுலபமில்லை. இதை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்பதைப் பொறுத்தே காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி இருக்கும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிற நேரத்தில் இப்படி மாநிலத் தலைவர் மாற்றம் தேவையா? என்கிற கேள்வியே கட்சிக்குள் பலமாக இருக்கிறது.