Advertisment

கீழடி ஆய்வுப் பணிகளை கைவிடுவதா? மார்க்சிஸ்ட் கண்டனம்

கீழடி ஆய்வுப் பணிகளை கைவிடுவதா? என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
keezhadi axcavation, tamilnadu, communist party of india (marxist), CPM, g.ramakrishnan, government of india

கீழடி ஆய்வுப் பணிகளை கைவிடுவதா? என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த தொல்லியியல் ஆய்வுப் பணிகளை மத்திய அரசு கைவிட்டு, தோண்டப்பட்ட குழிகளை மூடியுள்ளதோடு, அமைக்கப்பட்ட கூடாரங்களையும் காலி செய்துள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல ஜனநாயக இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவீகள் என பலதரப்பினரும், தமிழக மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் கீழடி அகழாய்வுப் பணிகளை கைவிட்டிருப்பது மத்திய பாஜக அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாகவே இந்த அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு முடக்கவும், கைவிடவும் திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கீழடி பகுதியில் 103 குழிகள் தோண்டப்பட்டு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய திராவிட மற்றும் தமிழ் நகர நாகரீகம் குறித்த ஆதாரங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 8 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இந்நிலை இதனை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது என்பதற்கான தெளிவான அடையாளமாகும்.

கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு கைவிட்டிருப்பதற்கான நோக்கம் தெளிவானது. மத்தியில் ஆள்பவர்கள் தங்களது இந்துத்துவா கோட்பாடுகளுக்கு துணை போவதற்காக உருவாக்கப்பட்ட புனைவுகளை வரலாறாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு மாறானதும் வரலாற்றுக் கலாச்சார உண்மைகளை வெளிப்படுத்துவதுமான ஆய்வுகளை கைவிட்டுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல அநாகரீகமானதுமாகும்.

மத்தியில் ஆளும் சங்பரிவார் கூட்டம் வலியுறுத்தும் சரஸ்வதி நாகரீகத்தை மறுக்கக் கூடிய வகையில் திராவிட, தமிழ் நகர நாகரீக அடையாளங்கள் கீழடி ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன என்பதே உண்மை. 2005ம் ஆண்டு நிறைவு பெற்ற ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை இதுவரை வெளியிடாததன் நோக்கமும் இதுவே.

எனவே மத்திய அரசு கீழடியில் கைவிடப்பட்டுள்ள அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடங்குமாறும், அதற்கான நிதி மற்றும் தேவையான ஆய்வாளர்களை ஒதுக்குமாறும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக அரசு மத்திய அரசின் இந்நடவடிக்கையை வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசுக்கு உரிய நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் தவறான செயலை கண்டிக்க முன்வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment