Why we need to save the Thadagam valley in Coimbatore: ஆனைக்கட்டியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தால், செங்கல் தொழிற்சாலைகளில் இருந்து செங்கலை ஏற்றிக் கொண்டு வெளியேறும் அல்லது மரக்கட்டைகளை நிரப்பிக் கொண்டு வலது பக்கம் திருப்பி செங்கல் தொழிற்சாலைகளை நோக்கி செல்லும் இந்த லாரிகளிடம் இருந்து உயிர் தப்பிவிட வேண்டும் என்பது அந்த சாலையில் பயணிக்கும் அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கும்.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளில் மெல்ல மெல்ல உருவான செங்கல் தொழிற்சாலைகளின் சாம்ராஜ்யம் கோவையின் அடையாளமாக மாறி, காற்று மாசுபாட்டிற்கும், நீர்வள சுரண்டல், கனிமவள சுரண்டலுக்கும் மிக முக்கியமான காரணமாக உருப்பெற்றது. இந்த பகுதியில் 186 செங்கல் தொழிற்சாலைகளும், 24 பச்சை செங்கல் உற்பத்தி செய்யும் காலவாய்களும் செயல்பட்டு வந்தன. பல இடங்களில் முறையான அனுமதி பெறாமல் இப்பகுதியில் பெரிய பெரிய புகைப்போக்கிகள், ராட்சத இயந்திரங்கள் வைத்து தொழிற்சாலைகளில் செங்கல் உற்பத்தி செய்யப்பட்டது.
மக்களின் போராட்டம், இயற்கை ஆர்வலர்களின் தொடர் வேண்டுகோள்கள், வனவிலங்கு நல ஆர்வலர்களின் இடைவிடாத மனுக்கள் தற்போது தடாகம் பள்ளத்தாக்கை மெதுவாக மூச்சு வாங்க வைத்துள்ளது. யானைகள் வழித்தடத்தில் இருக்கும் செங்கல் தொழிற்சாலைகள் முதலில் மூடப்பட்டது. பிறகு உரிமம் பெறாமல் இயங்கிய அனைத்து செங்கல் தொழிற்சாலைகளுக்கும் முடிவுகாலம் பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் மக்கள் மத்தியில் இது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் பள்ளத்தாக்கில் இயற்கை வளம் சுரண்டப்பட்டு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சரியாக இன்னும் பல வருடங்கள் தேவைப்படும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது மக்கள் நலன் கருதியும் இயற்கை வளங்கள் நலன் கருதியும் 2019ம் ஆண்டு டி.எம்.எஸ். ராஜேந்திரன் பொதுநல வழக்கு (வ.எண். WP.NO.27356/2019) ஒன்றை தொடுத்தார். யானைகள் மற்றும் பல்லுயிர்கள் நான் கருதியும் அவற்றை பாதுகாக்க பொதுநல வழக்கு சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் 2019ம் ஆண்டு மற்றொரு பொதுநல வழக்கு (WP.NO.28475/2019) ஒன்றை தொடுத்தார். தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
“ஆரம்ப காலங்களில் இந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் பழங்குடி மக்கள், பட்டியல் இன மக்கள் கல் அறுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலர் தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் சமீப காலங்களில் குறைவான ஊதியத்திற்கு அதிக அளவில் வடநாட்டு மக்கள் வேலைக்கு கிடைப்பதால், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இதனை சார்ந்து இருக்கவில்லை. இந்த செங்கற்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக இயற்கையான, மாசு இல்லாத, புகையற்ற சுத்தமான காற்றை சுவாசிக்க பழகியுள்ளனர் பொதுமக்கள்” என்று கூறுகிறார் பழங்குடியின ஆர்வலர் ஒடியன் லட்சுமணசாமி.
சமூக செயற்பாட்டாளரும், அப்பகுதியில் வசித்து வருபவருமான தடாகம் கணேஷிடம் உரையாடிய போது ”தற்போது இந்த பகுதியில் யானை - மனித இடையூறுகள் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. வனத்துறை அதிகாரிகள் இந்த மாதம் முதல்வருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதனை வெளிப்படையாக கூறியுள்ளனர். இன்று சாலையில் செல்லும் போது சுத்தமான காற்றை, தூசி, புகையின் நச்சு இல்லாமல் எங்கள் மக்களால் சுவாசிக்க முடிகிறது. தடாகத்தில் எப்போதும் “பிஸியாக” செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பிரிவு இன்று “காத்து” வாங்கிக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த பகுதியில் பிறக்கும் கௌசிகா நதியும், சங்கனூர் ஆறும் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புகைமண்டலம் சூழ்ந்தே இருந்த காரணத்தால் இப்பகுதியில் மழை வரத்து குறைந்து போய் வறட்சியான சூழலே நிலவியது. விவசாயிகளும் மற்ற தொழிலை நோக்கி சென்றுவிட்டனர். ஆனால் தொடர் போராட்டங்களுக்கு பிறகு இந்த செங்கல் தொழிற்சாலைகள் பயன்பாடு முடிவுக்கு வந்ததன் மூலமாக விரைவில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், அருகிப்போன பசுமையான சுற்றுச்சூழல் மீண்டும் இங்கே உருவாகும் என்றும் கணேஷ் கூறினார்.
தடாகம் பள்ளத்தாக்கு
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தடாகம் பள்ளத்தாக்கு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் இயங்கி வந்த செங்கல் தொழிற்சாலைகளாலும், கனிமவளக் கொள்ளையாலும் காற்று மாசு, நிலத்தின் சூழலியலில் மாற்றம், நீர் நிலைகளின் போக்கில் மாற்றம், மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தது. ஒரு காலத்தில் விளைநிலமாக இருந்த தடாகம் பள்ளத்தாக்கு இன்று வறண்ட பூமியின் வாசலாக காட்சி அளிக்கிறது.
கேரளத்தில் செங்கல் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட பிறகு கையில் இருக்கும் வண்டி வாகனங்களுடன் செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்கள் நேராக வந்த இடம் தடாகம் பள்ளத்தாக்கு தான் என்ற பேச்செல்லாம் கூட இன்றும் உண்டு.
விவசாய நிலங்களை ஒட்டியே பல இடங்களில் செங்கல் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது. செங்கற்கல்லை சுட இரவும் பகலுமாக எரிக்கப்பட்ட மரக்கட்டைகளில் இருந்து கிளம்பிய புகை இன்று பலரின் சுவாசக்குழாயில் நஞ்சாக நிற்கிறது. செங்கல் தொழிற்சாலைகளுக்காக தண்ணீரும் சுரண்டுப்பட்டு விவசாய நிலம் வறண்டு விட, விவசாயத்தைக் காட்டிலும் செங்கல் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று இறங்க, செங்கல் தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் தோன்றின.
பேரிடர் நகரம் சென்னை: எச்சரிக்கும் IPCC அறிக்கை
நீர்வள ஆதரமாக இருந்த தடாகம் பள்ளத்தாக்கு
கோவை நகரின் வடமேற்கு எல்லையில் சுமார் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் தடாகம் பள்ளத்தாக்கில் தான் சங்கனூர் ஆறு உற்பத்தியாகிறது. இது காவிரி நதியின் கிளை நதிகளில் ஒன்றான நொய்யலுடன் இணைந்து, கோவை நகரை இரண்டாக பிரித்து தென்கிழக்கில் அமைந்திருக்கும் சிங்கை ஏரியில் கலக்கிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் பயணிப்பதால் குடிநீர் தேவை மட்டுமின்றி பாசன வசதிக்காகவும் பல ஆண்டுகளாக இந்நதி மக்களுக்கு உதவியது.
சங்கனூர் நதியில் ஏற்படும் வெள்ளம் பல காலங்களில் கரையோரங்களில் வாழ்ந்த சின்னஞ்சிறு கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இதனை மட்டுப்படுத்தும் வகையில் 1980களில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று வெட்டப்பட்டு, தடாகம் பள்ளத்தாக்கின் முகப்பில் அமைந்திருக்கும் கணுவாய் பகுதியில் கட்டப்பட்ட 2 தடுப்பணைகளின் வாய்க்கால் வழியாக நிரம்பும் படி அமைக்கப்பட்டது.
1990களில் இந்த ஏரி நிரம்பி வழிய வறண்ட பூமியான கோவையின் வடக்கு நிலத்தடி நீர் திறனை உயர்த்தி வேளாண் மக்களுக்கு பயன் அளித்தது. ஆனாலும் வெறும் 10 ஆண்டுகளில் விவசாயத்தை சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையை வெகுவாக மாறிவிட்டது செங்கல் தொழிற்சாலைகளின் வருகை.
காரணம் என்ன?
”கிழக்கு அணை அவ்வபோது வற்றினாலும் கூட 2010ம் ஆண்டு வரை கூட மேற்கு அணையில் நீரைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 2010-களுக்கு பிறகு இந்த பகுதியில் உள்ள கணுவாய் தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெரும் மழை பெய்திருந்த போதிலும் கணுவாய் தடுப்பணைக்கு நீர் வரவில்லை” என்று தன்னுடைய புத்தகத்தில் விவரிக்கிறார் இளம் இயற்கை ஆர்வலர் சாந்தலா ரமேஷ்.
”சங்கனூர் ஆற்றில் மொத்தம் 8 சிற்றாறுகள் வந்து பாய்கின்றன. அதில் அனுவாவி - கருப்பராயன் ஓடையில் மட்டும் 19 சிற்றோடைகள் வந்து கலக்கிறது. ஆனாலும் ஏன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கனூர் ஆற்று நீர் கணுவாய் தடுப்பணையை வந்தடையவில்லை என்பதே எனக்கு மிகப்பெரிய சந்தேகமாக இருந்தது. அப்போது நிலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் மென்பொருளை வைத்து அப்பகுதிகளை கண்காணித்த போது, செங்கல் தொழிற்சாலைகளை இயக்க தேவைப்படும் மண்ணை, லாரிகள் டன் கணக்கில் ஓடைகளின் கரையில் இருந்து அள்ளியது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி கல்லை சுட தேவைப்படும் மரக்கட்டைகளை, எண்ணெய் ஆகியவற்றை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட இதே லாரிகள் கரையில் மண்ணை அள்ளி, ஓடைகளின் நடுவே பயணித்து செங்கல் தொழிற்சாலையை அடைந்ததும் தெரிய வந்தது” என்றும் கூறுகிறார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு இப்பகுதியின் நிலவரம் என்ன என்று அறிய சாந்தலா தன்னுடைய அப்பா மற்றும் மேலும் சில இயற்கை ஆர்வலர்களுடன் செங்கல் தொழிற்சாலை செயல்பட்ட இடத்திற்கு சென்ற போது, வி.கே.வி. செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் சுந்தரராஜன் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனைக்கட்டி - வீரபாண்டி யானைகள் வழித்தடம்
பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி, ”இது யானைகள் வழித்தடமாகவும், வாழ்விடமாகவும் இருக்கிறது, எனவே செங்கல் தொழிற்சாலைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றத்தை நாட கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பல்வேறு செங்கல் தொழிற்சாலைகள் மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கர்நாடகாவின் பிரம்மகிரியில் துவங்கும் யானைகளின் வலசை நீலகிரியை கடந்து இந்த பள்ளத்தாக்கு வழியாக கிழக்குத் தொடர்ச்சி மலைகளை அடைகிறது. ஆனைகட்டியில் முக்காலியில் ஆரம்பிக்கும் வலசை பாதை, கிழக்கில் நீடித்து பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தையும், தெற்கில் நீடித்து போளாம்பட்டி வனச்சரகத்தையும் அடைகிறது. இந்த வலசை பாதையின் நீளம் மொத்தம் 21 கி.மீ. அகலம் 0.1 கி.மீ-ல் துவங்கி 1.5கி.மீ வரை விரிவடைகிறது.
அதிக அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்தொழிற்சாலைகள் மற்றும் செம்மண்ணிற்காக வெட்டப்பட்ட பெரிய பெரிய குழிகள் யானைகளின் வலசைப் பாதையை மாற்றி அமைத்தது. இரவும் பகலுமாக செயல்பட்டு வந்த செங்கற்தொழிற்சாலைகள் காரணமாக தங்களின் பாதையையும், பழக்கத்தையும் மாற்றிக் கொண்ட யானைகள் சமயங்களில் மனிதக் குடியிருப்புகளுக்குள் புகும் மோசமான சூழலும் ஏற்பட்டது. வெட்டப்பட்ட குழிகளில் விழுந்து இறந்த யானைகளின் எண்ணிக்கையும், மனித - விலங்கு மோதலால்கள் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளும் கோவையில் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கே அதிகமாக பதிவாகியுள்ளது.
2010 துவங்கி, செங்கற் தொழிற்சாலைகள் மூடப்பட்ட 2021 காலகட்டம் வரை கோவையில் மொத்தமாக மனித - யானை மோதல்களால் பதிவான இறப்புகளில் (140), 53 இறப்புகள் (38%) தடாகம் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளது என்று, தடாகம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே பதிலில், 2010 முதல் 2021 காலகட்டத்தில் கோவையில் மொத்தமாக பலியான யானைகளின் எண்ணிக்கை 146 ஆகும். அதில் 28% யானைகள் (41) தடாகம் பள்ளத்தாக்கில் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித – யானை இடையூறுகளைப் பற்றி பேசும் “களிறு”; சர்வதேச விருதுகள் பெற்று அசத்தல்
இழப்பீடு கோரலாம்
தொடர்ந்து இயங்கி வந்த செங்கல் தொழிற்சாலைகளால் காற்று, நீர் மாசு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று பசுமை தீர்பாயம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. செங்கல் தொழிற்சாலைகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு கோரிக்கையை முன்வைத்து தீர்ப்பாயத்தை அணுகலாம் என்று அறிவித்திருந்தது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது.
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டும்
”மாவட்ட நிர்வாகம் அனைத்து செங்கல் தொழிற்சாலைகளையும் அடைத்து சீல் வைத்திருந்தாலும், யாருக்கும் தெரியாமல் அங்கிருக்கும் லாரிகள் மற்றும் இதர உபகரணங்களை அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு இடத்திற்கு மாற்றி வருகின்றனர் செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்கள். மலையைக் குடைந்து அவர்கள் தோண்டி எடுத்த மண்ணின் அளவு இவ்வளவு தான் என்று யாராலும் கூற முடியாது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். தற்போது மண் தோண்டப்பட்டு ஆங்காங்கே குழியுடன் காணப்படும் பரப்பில் சாம்பலைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இது மேலும் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் இங்குள்ள வன உயிரினங்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும். வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி அன்று உயர் நீதிமன்ற விசாரணையின் போது எங்கள் தரப்பு, மக்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற விரும்புகிறோம்” என்று கூறுகிறார் இளம் இயற்கை ஆர்வலர் சாந்தலா ரமேஷ்.
இயற்கை தன்னை தானாகவே குணப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டது. நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் அந்த பகுதியை இயற்கை உணர்திறன் மண்டலமாகவும், புற்பரப்பு சுற்றுச்சூழல் மண்டலமாகவும் (Grassland Eco System) அரசு அறிவிக்க வேண்டும். இந்த பகுதியில் உருவாகும் சங்கனூர் ஆற்று நீர் இனி வரும் காலங்களில் சின்னவேடப்பட்டி ஏரியை அடைவது என்பது சாத்தியமற்றது. ஆனால் இங்கே கனிம வளங்களை வெட்டி எடுத்து உருவாக்கப்பட்டுள்ள குழிகள் அனைத்தையும் சிறு சிறு குளங்கள் போன்று மாற்றுவது அந்த பகுதியில் இருக்கும் வன உயிரினங்கள் செழிப்புற உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார் அவர்.
ஐந்து வருவாய் கிராமங்களையும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவித்து இங்குள்ள இயற்கை சூழலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சாந்தலாவின் கருத்தையே கணேஷும் முன்மொழிகிறார். தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் சங்கனூர் ஓடை குறித்து தொடர்ந்து எழுதி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சாந்தலா ரமேஷூக்கு (18), மகளிர் தினம் அன்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ”இளம் சமூக செயற்பாட்டாளர் 2021 ” விருதை வழங்கி கௌரவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.