திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் கத்தியுடன் பிடிபட்டவரின் மனைவி கண்ணீர் வடித்தார். மகள் திருமணத்திற்கு உதவி கேட்கச் சென்றவரை அவமானப்படுத்திவிட்டதாக குமுறினார் அவர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிக்காக நேற்று (ஆகஸ்ட் 6) சென்னையில் இருந்து கிளம்பினார். திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய அவரை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகிகள் திரளாக வரவேற்றனர். பிரஸ்மீட்டுக்காக ஓ.பி.எஸ். வந்தபோது, கூட்டத்தில் கத்தியுடன் ஒருவர் பிடிபட்டார்.
முதலில் அவரது பெயர் சோலைராஜன் என தகவல்கள் வந்தன. ஆனால் போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சோழராஜன் (வயது 48) என தெரியவந்தது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் இவர். இவர் ஆரம்பகாலம் முதல் அ.தி.மு.க. தொண்டர்! அதிலும் குறிப்பாக ஓ.பி.எஸ். அபிமானி! ஓ.பி.எஸ்.ஸை கத்தியால் தாக்க முயன்றதாக இவர் கைதான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி விமான நிலைய போலீஸார் இவரை பிடித்து விசாரித்தார்கள். அதன்பிறகு திருச்சி மாநகர துணை கமிஷனர் சக்தி கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “அவர் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்தான். உறுப்பினர் அட்டை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து விட்டோம். தட்டு ரிக்ஷா தொழிலாளியான அவர், வேலைக்கு செல்லும்போது ஒரு சிறு கத்தியை கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். அப்படித்தான் கால் சட்டைக்குள் கத்தியை வைத்திருந்திருக்கிறார்.
விமான நிலையத்தில் நெரிசலில் அவரது வேஷ்டி அவிழ்ந்ததால், கத்தி கீழே விழுந்தது. அதனாலேயே சிக்கிக் கொண்டார். வேறு தவறான நோக்கத்தில் அவர் வந்ததாக தெரியவில்லை. ஆனாலும் விமான நிலையம் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு ஆயுதங்களுடன் செல்வது தவறு. அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளோம்.” என்றார் அவர்.
சோழராஜனின் மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், “எனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர் என்ற அடிப்படையில் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து உதவி கேட்கச் சென்றிருப்பார் என நினைக்கிறேன். யாரையும் தாக்கவேண்டும், கொல்லவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. அநியாயமாக ஒரு தொண்டரை சந்தேகப்பட்டு, அந்த குடும்பத்தின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்களே!” என கண்ணீர் விட்டார் அவர்.
சோழராஜன், அ.தி.மு.க. தொண்டரா இல்லையா? என்பதை விசாரிக்க, திருச்சியில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவு நிர்வாகிகளுக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஆனால் அவர்களும் இந்தப் பிரச்னையை பெரிய அரசியல் விவகாரமாக மாற்றும் வகையில் விமான நிலைய போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததும், அங்கேயே போராட்டம் நடத்தியதும் கட்சித் தொண்டர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பது நிஜம். அதற்காக அப்பாவி தொண்டர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதும் முக்கியம். ஓ.பி.எஸ்.ஸே இது குறித்து விசாரித்து உண்மையை விளக்கினால் நல்லது.