பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி... நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை

அதிமுக (அம்மா) அணி சார்பில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் இரு அணிகளிடையே...

சென்னை: இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள அதிமுக-வை இணைக்கும் வகையில் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சில மாதங்கள் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பணியாற்றினார். காலியான அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியை நிரப்பும் வகையில், அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

இதற்கு அடுத்த கட்டமாக சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி இருந்த பன்னீர் செல்வம் திடீரென, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி அருகில் தியானம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும், அதனால் தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது என்று பன்னீர் செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

ஆனால், சசிகலாவோ பன்னீர் செல்வம் கூறுவதில் உண்மையில்லை என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து, பன்னீர் செல்வம் அதிமுக-வில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர், அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர். இதனால் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது.

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிடவே, சசிகலா சிறைக்கு சென்றார். பின்னர் அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளர் பதவி என புதிதாக உருவாக்கப்பட்டு அது டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, தனது பலத்தை சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிரூபனம் செய்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகரில் வெற்றிடம் ஏற்பட்டதை நிரப்பும் வகையில், அங்கு இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதிமுக-வின் இரட்டை இலை சின்னமானது யாருக்கு சொந்தமானது என குழப்பம் ஏற்பட்ட நிலையில், இரு அணிகளும் தங்களுக்கு தான் இரட்டை இலை சொந்தமானது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தன.

இறுதியில், தேர்தல் ஆணையம் இரண்டு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னத்தை வழங்காமல், அந்த சின்னத்தை முடக்கியது. இதன்காரணமாக, அதிமுக அம்மா அணியின் சார்பில் டிடிவி தினகரனும், பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனனும் என புதிய சின்னத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இடைத்தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் பணப்பட்டுவாடா புகாரால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. கட்சியில் இருந்து சசிகலா தினகரன் குடும்பதை நீக்க வேண்டும், அவர்களின் தலையீடு கட்சியில் இருக்கக்கூடாது, ஜெயலலிதாவின் மரணத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது பன்னீர் செல்வம் தரப்பின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுக (அம்மா) அணி சார்பில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைப்பது குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. (அம்மா) தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், காமராஜ், பென்ஜமின், கே.பி.அன்பழகன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், விஜயகுமார், ஜெயவர்தனன், சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் அணியினர் வைத்துள்ள நிபந்தனைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதுபோல ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் பேச்சு வார்த்தைக்கு குழு அமைக்கபட்டது.

கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவில் கே.பி முனுசாமி சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்), நத்தம் விஸ்வநாதன் (முன்னாள் அமைச்சர்), கே.பாண்டியராஜன் (முன்னாள் அமைச்சர்), மைத்ரேயன் (நாடாளுமன்ற உறுப்பினர்), ஜே.சி.டி.பிரபாகர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), மனோஜ்பாண்டியன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த இரு அணிகளுகுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close