”எங்கள் திருமணத்தால் இந்த மாநிலத்துக்கு என்ன ஆபத்து வந்து விடப்போகிறது? நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோமோ? இல்லையோ? நாங்கள் கொடைக்கானலில் தான் ஒன்றாக வாழ்வோம்.”, என இரோம் சர்மிளா தெரிவித்தார்.
மணிப்பூரை சேர்ந்த இரோம் சர்மிளா, சர்ச்சைக்குரிய அஃப்ஸ்பா எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அதன்பின், தேர்தலில் போட்டியிட்டு படுதோலி அடைந்தபிறகு, தன் காதலரான அயர்லாந்த் நாட்டை சேர்ந்த தேஸ்மண்ட் ஹட் ஹோவிடன்-ஐ திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாக தெரிவித்த இரோம் சர்மிளா, தன் காதலருடன் கொடைக்கானலில் குடியேறினார்.
இந்நிலையில், இரோம் சர்மிளா தன் காதலர் தேஸ்மண்ட் ஹட் ஹோவிடனுடன் திருமணம் செய்துகொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/DEg40EJXUAEeyc2-300x217.jpg)
இவர்களுடைய திருமணத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் யாரும் ஆட்சேபணம் தெரிவிக்காவிட்டால், அவர்களுடைய திருமணம் நடைபெறும்.
ஆனால், ”கொடைக்கானலில் திருமணம் செய்து அவரை இங்கேயே நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டால், கொடைக்கானலின் அமைதி கெடும்”, எனக்கூறி அவரது திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இரோம் கொடைக்கானலில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தான் போராடவிருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் கருத்து சுதந்திரம் குறித்தும், ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஆதரவாகவும் புதன் கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இரோம் சர்மிளா தன் காதலருடன் கலந்துகொண்டார்.
இதன்பின், இரோம் சர்மிளா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஏன் எங்களுடைய திருமணத்தை நினைத்து ஏன் அவர்கள் பயப்படுகின்றனர்” இது தனிப்பட்ட 2 நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோமோ, இல்லையோ கொடைக்கானலில் தான் நாங்கள் ஒன்றாக வாழ்வோம். இரண்டு நபர்களின் திருமணத்தால், இந்த அழகான மாநிலத்துக்கு என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது என எனக்கு தெரியவில்லை. நாமெல்லாம் மனிதர்கள். என்னுடைய வாழ்வு மற்றும் இறப்பு குறித்து நான் கவலைபடுவதில்லை. மனிதத்திற்காக என் உயிரையும் நான் தியாகம் செய்வேன்.”, என கூறினார்.
மேலும், மாநில மற்றும் மத்திய அரசுகள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிதொழிலை ஒழிக்கவும், அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என விமர்சித்தார்.
இதனை ஒழிக்கும்போதுதான் தீண்டாமையை ஒழிக்க அம்பேத்கர் கூறிய உறுதிமொழியை முற்றிலுமாக நிறைவேற்ற முடியும் எனவும் இரோம் சர்மிளா கூறினார்.
”’கக்கூஸ்’ ஆவணப்படத்தை தடை செய்து, இயக்குநர் திவ்யபாரதியை கைது செய்தது. ஆனாலும், அவர் மன உறுதியை அழிக்கவில்லை என்றவுடன், கைக்கூலிகளை ஏவி கொலை மிரட்டல் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை அளிக்கிறது”, என இரோம் கடுமையாக குற்றம்சாட்டினார்.
”’கக்கூஸ்’ குறித்து நான் கவிதைகள் எழுதிவருகிறேன்”, எனக்கூறிய இரோம் சர்மிளா, தன் திருமண நாளன்று திவ்யபாரதி துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.