கருணாநிதி பிறந்தநாளில் தொண்டர்களை சந்திப்பாரா? மு.க ஸ்டாலின் விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பாரா என்பது குறித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை சித்தாரிப்பேட்டையில் மே தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முக ஸ்டாலின், மே தின பூங்காவில் மலர் வைலையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது முக ஸ்டாலின் பேசியதாவது: தொழிலாளர்கள் உரிமைக்காக பாடுபட்டவர் திமுக தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

மே-1 தினத்தை விடுமுறையாக அறிவித்தது திமுக தலைவர் கருணாநிதி தான். மேலும், இந்திய அளவில் மே-1 தினத்தன்று விடுமுறை அறிவிக்க முயற்சி எடுத்தவர் கருணாநிதி. ஆதலால், மே-1 தினத்தை கொண்டாடும் உரிமை திமுக-வுக்கு உள்ளது. சமீபத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் குறித்து பேசிய அவர், விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதாக கூறினார்.

இதனிடையே கருணாநிதியின் உடல் குறித்து ஸ்டாலின் பேசுகையில், தற்போது, கருணாநிதியின் உடல் சீரான நிலையில் இருக்கிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே மருத்துவர்கள் அனுமதி அளித்தால், கருணாநிதி தனது பிறந்தநாள் அன்று தொண்டர்களை சந்திப்பார் என்றார்.

தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தினர். ஆனால், சோதனையின் போது கண்டுபிடித்தது என்ன? அதன் பின்புலம் தான் என்ன? அது குறித்து ஒரு தகவரும் வெளியிடப்படவில்லை. இது போன்ற சோதனைகள் வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கக் கூடாது. முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை, மணல் மாபியா கும்பல் வீட்டில் சோதனை என பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்ட போதிலும், அது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா?

பாஜக தலைமையிலான மத்திய அரசு, மாநிலத்தின் சுயாட்சியை மீறும் வகையில் செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் கூறினார்.

×Close
×Close