அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் வெறும் அரசியலை மட்டுமல்லாமல் சமூக அவலங்களையும் உணர்வுபூர்வமாக அலசக்கூடியவர். ‘நீட்’ தேர்வால் உருவாகும் பாதிப்பை ஒரு மாணவியை சாட்சியாக வைத்து முகநூலில் அவரது விவரிப்பு இங்கே...
அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம்.
குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி.
அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.
இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள்.
இதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.
அந்தக் காரணம், இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பிளஸ் டூ-விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வு பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.
ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப் பட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்து கொண்டார் அனிதா.
‘நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?’ என்று கேட்டேன்.
“இல்லீங்க. போகலை”
‘அப்பா என்ன பண்றார்ம்மா?’
“திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு”
இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை. குழுமூர் கிராமத்தில் பிழைப்பாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து நான்கு மகன்களுக்கும் கல்லூரி கல்வி வழங்கி விட்டார்.
உடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூக செயற்பாட்டாளர். பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை அணுகக் கூடியவர். குடிமைத் தேர்வு பயிற்சிக்காக சென்னயில் பயில்பவர்.
மணிரத்தினத்திடம் கேட்டேன், ‘அப்பாவும் திருச்சியில், நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மா தான் அனிதாவுக்கு துணையா ?’. அவரது பதில் அடுத்த இடி... ‘அம்மா இறந்து பத்து வருஷமாச்சி அண்ணா’.
ஒடுக்கப்பட்ட இனம். அம்மா இறந்துவிட்டார். அப்பா வெளியூரில் கூலி வேலை. ஒண்டுக் குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிப்பறை வசதி கிடையாது. இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் அனிதா.
கல்வி மாத்திரமே எதிர்காலம் என்று உணர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, +2ல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும், வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு மத்திய அரசாங்கம்.
இந்த ஒரு அனிதா தான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ ?
இத்தனை பேர் வாழ்க்கையை சூறையாடிய 'மோடி' என்ன பதில் சொல்லப் போகிறார்? ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல் இவரை அதல பாதாளத்தில் வீழ்த்தும். அது வரை போராடுவோம்.
அனிதாக்களுக்காக நீட் தேர்வை எதிர்ப்போம் !” என உணர்வுபூர்வமாக விவரித்திருக்கிறார் சிவசங்கர்.
ஒரு போராட்டத்தின் நியாயத்தை இதைவிட அதிகமாக யாரும் சொல்லிவிட முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.