ஒன்பது வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் 15-ஆம் தேதி மாவட்டம் வாரியாக ரசிகர்களை தேர்ந்தெடுத்து அழைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த புகைப்பட படலத்தில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்த நிகழ்வின் இறுதி நாளின் போது பேசிய ரஜினி, "அனைவரும் போருக்கு தயாராக இருங்கள். போர் வரும் போது சொல்கிறேன். அதுவரை அவரவர் வேலையைப் போய் பாருங்கள்" தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை சூசமாக தெரிவித்து ரசிகர்களுக்கு தெம்பூட்டினார் ரஜினி.
இதைத் தொடர்ந்து, ஷங்கரின் 2.0, பா.ரஞ்சித்தின் காலா ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் ரஜினி பிஸியானார். 2.0 படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பு முடிவடைந்து டப்பிங், ரீ-ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
தற்போது 'காலா' படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஏற்கனவே மும்பை பகுதியில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி நகரை அரங்காக அமைத்து இரண்டாம் கட்டட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தினமும் பங்கேற்று நடித்து வருகிறார். அவருடன் கதாநாயகியாக கியூஷா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். இதுவரை 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழுவினர் மீண்டும் மும்பை செல்கிறார்கள். காலா படப்பிடிப்பு முடிவடைவதைத் தொடர்ந்து விடுபட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை அடுத்த மாதம் (அக்டோபர் ) 6 நாட்கள் தொடர்ச்சியாக சந்திக்க ரஜினி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரசிகர்களுக்கு விநியோகிக்க அடையாள அட்டைகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், ரசிகர்களின் சந்திப்பின் போது, ரஜினி தனது அரசியல் வருகை குறித்த முக்கிய முடிவை ரசிகர்கள் முன் அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராகவேந்திர மண்டப தலைமை நிர்வாகிகளை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, "ஃபெப்சி ஸ்டிரைக் உள்ளிட்ட சில காரணங்களால், ரஜினிகாந்தால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. அக்டோபர் 15-ஆம் தேதி அல்லது 20-ஆம் தேதி மீண்டும் ரசிகர்களை ரஜினி சந்திப்பார்" என்று தெரிவித்தனர். மேலும், அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு, "அதை ரஜினியே ரசிகர்களிடம் தெரிவிப்பார்" என்றும் கூறினர்.
இதனால், 'இப்போதைக்கு உங்களது வேலையைப் பாருங்கள். நானும் என் வேலையைப் பார்க்கிறேன். போர் வரும் போது சொல்லி அனுப்புகிறேன்' என்று ரசிகர்களிடம் தெரிவித்த ரஜினி, தற்போது தனது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டதால், நிச்சயமற்ற தற்போதைய தமிழக அரசின் நிலையை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு, அடுத்த மாத ரசிகர்களின் சந்திப்பின் போது நிச்சயம் 'போர் முரசு' கொட்டுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.