”தமிழகத்தில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பது உறுதி”: ஓ.என்.ஜி.சி.

கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து, கிராம மக்களிடம் தெரிவிக்கப்படும் என, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து, கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபடும் என, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல் இயக்குநர் குல்பீர் சிங் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சனிக்கிழமை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல் இயக்குநர் குல்பீர் சிங் மற்றும் பொது மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய குல்பீர் சிங், “கதிராமங்கலம் கிராமத்தினரின் சந்தேகங்களை போக்குவதற்கு நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அந்நிய சக்திகள் கதிராமங்கலத்தில் பிரச்சனைகளை தூண்டுகின்றன. 2008-ஆம் ஆண்டில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டதிலிருந்தே கதிராமங்கலம் கிராம மக்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.”, என தெரிவித்தார்.

தேவை ஏற்படும் போதெல்லாம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உள்ளூர் மக்களை சந்தித்து சந்தேகங்களை போக்கியுள்ளதாகவும், நெடுவாசல் கிராமத்திலும் தங்கள் பணிகள் குறித்து கிராம மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்ததாகவும் குல்பீர் சிங் கூறினார்.

“நாங்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுவதை மறுக்கிறோம். ஓ.என்.ஜி.சி. நிறுவனம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து விரைவிலேயே கிராம மக்களை சந்திப்போம். அவர்களின் சந்தேகங்களை தீர்ப்போம்.”, எனவும் அவர் தெரிவித்தார்.

காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முனைவதாக குற்றம்சாட்டப்படுவதை ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் மறுத்தனர். தமிழகத்தில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் எனவும், அத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும், அதற்காக பல பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டு வரும் பணிகளுக்கு எதிராக தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகவும் அவர்கள் கூறினர். இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், எண்ணெய் கசிவு அன்று ஏற்பட்ட கலவரம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை எனவும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறினர்.

×Close
×Close