‘சேரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இரண்டாவது நாளாக இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் சேரன். அவருக்கு ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “இயக்குநர் சேரன் மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், சமீப காலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள், அவர்மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. என்மீது தவறு இருந்து அதை சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்வேன். ஆனால், சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு.
ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழிவாங்கும் என்பதை, ஜனநாயகத்திற்கு எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம், இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவதுபோல் இருக்கிறது.
எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக்கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பிப் பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படிதான் செயல்படுகிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதும், மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்.
என்னுடைய நண்பர்களையும், சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து, கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி, வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாறவேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால், சங்க விதிகள்படி அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.