காலா படத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமா? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதலாக காலா திரைப்படத்திற்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதலாக காலா திரைப்படத்திற்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலா படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நடிகர் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் திரையிடும் திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை பெரம்பூர் செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எம்.தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

விதிமீறலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், விதிமீறலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் அதிகமாக இருப்பதாகவும், சில நேரங்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

வாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தல் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close