அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மெரினாவில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்க என ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு...
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தகுதி தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், இடதுசாரிகள் உள்ளிட்டு பிரதான எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் இந்த கோரிக்கையின் நியாயத்தை மத்திய பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் உணரவில்லை. வலுக்கட்டாயமாக நீட் தகுதி தேர்வு திணிக்கப்பட்டதால், +2 தேர்வில் கூடுதலான மதிப்பெண் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்காமல் தாழ்த்தப்பட்ட ஏழை சுமைப்பணி தொழிலாளியின் மகள் அனிதா தன்னை மாய்த்துக் கொண்ட துயரமான நிகழ்வு தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அனிதாவின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது. சென்னை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், மதுரை, வேலூர், புதுச்சேரி, காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வீதியில் இறங்கியுள்ளனர். மருத்துவம் பயிலும் மாணவர்கள், தொழிற்கல்வி மாணவர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திரண்ட மாணவர்களிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். மாணவ - மாணவிகளை குண்டுகட்டாக தூக்கி சாலைகளில் போட்டுள்ளனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டிச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர்கள் மாரியப்பன், நிருபன், சந்துரு, ஜான்சி, சிந்து உட்பட 19 மாணவர்களையும் , 9 மாணவிகளையும் காவல்துறையினர் கைது செய்து வழக்கு தொடுத்துள்ளனர். அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், புனையப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மருத்துவ சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும், அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட வேண்டுமெனவும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.