15 நாட்களின் அ.தி.மு.க. அணிகளை இணைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி விறுவிறுப்பாக ‘மூவ்’ செய்கிறது. அமைச்சர் வீரமணி இதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே நிலவி வந்த இருமுனை மோதல், சமீப நாட்களாக மும்முனை மோதலாக உருவெடுத்திருக்கிறது. காரணம், சசிகலாவை பொதுச்செயலாளராக கொண்டு இயங்கும் அம்மா அணியில் இப்போது யார் ஆதிக்கம் செலுத்துவது? என்கிற போட்டிதான். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவார்’என அமைச்சர் ஜெயகுமார் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு பிரமுகர்களான வெற்றிவேல், புகழேந்தி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர், ‘ஆட்சியை எடப்பாடி வழி நடத்தட்டும். கட்சியை வழிநடத்தும் அதிகாரம் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.க்குத்தான் உண்டு’ என பிரகடனம் செய்தனர். இதை நிரூபிக்கும் வகையில் வருகிற 14-ம் தேதி முதல் மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை டி.டி.வி. அறிவித்தார். அதோடு, ஆகஸ்ட் 4-ம் தேதி முதல்கட்டமாக 64 பேருக்கு அ.தி.மு.க. தலைமைக்கழக பதவிகளையும், சார்பு அணிகளின் பொறுப்பையும் வாரி வழங்கினார் டி.டி.வி.தினகரன்.
‘டி.டி.வி.யின் பதவியே செல்லுமா, செல்லாதா? என தேர்தல் ஆணைய பரிசீலனையில் இருக்கும்போது, அவர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதும் செல்லத்தக்கதல்ல’ என இதற்கு ‘கமெண்ட்’ கொடுத்தார் ஜெயகுமார். இதற்கு டி.டி.வி.தினகரன் கொடுத்த விளக்கத்தில், ‘ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் யாரையும் நான் நீக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காலியாக இருந்த பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளோம்’ என்றார் அவர்.

இந்த பஞ்சாயத்தே முடியாத சூழலில், அடுத்த அதிரடியாக ஆகஸ்ட் 9-ம் தேதி (நேற்று) அ.தி.மு.க. தொழிற்சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சிலரை அதிரடியாக நீக்கி, புதிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் அறிவித்தார். ஜெ.பேரவை உள்ளிட்ட சார்பு அணிகள் சிலவற்றுக்கும் மாநில இணை, துணை செயலாளர்களை கூடுதலாக தினகரன் அறிவித்தார். முதல்முறையாக நிர்வாகிகள் சிலரை நீக்கவும் டி.டி.வி. தயாராகியிருப்பது, எடப்பாடி தரப்பை பதற்றமாக்கியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி அவசரமாக நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இதில் அமைச்சர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், டி.டி.வி.யின் டார்ச்சரை சமாளிக்கும் விதமாக ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். அணிகளை இணைப்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பு மீடியாவிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, ‘இன்னும் 15 நாட்களில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் கட்டாயம் இணையும்’ என வெளிப்படையாக அறிவித்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, ஆரம்பம் முதல் கட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வருபவர், கே.சி.வீரமணி. எனவே அவரது இந்தப் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த அம்மா அணி அவைத்தலைவரும் பள்ளிக் கல்வி அமைச்சருமான செங்கோட்டையனும், ‘இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது’ என குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமைச்சர்களிலேயே அத்தனை பேரும் இதற்கு உடன்படுகிறார்களா? என்கிற கேள்வியும் இருக்கிறது. காரணம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சசிகலா குடும்பத்திற்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. ஆகஸ்ட் 9-ம் தேதி விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய சி.வி.சண்முகம், ‘ஓ.பி.எஸ். நிர்வாக திறமை அற்றவர். அதனால்தான் 47 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது’ என விமர்சித்தார்.
தவிர, டி.டி.வி.யை தவிர்த்துவிட்டு, இரு அணிகளையும் இணைக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி! காரணம், எடப்பாடி உள்பட இவர்கள் அனைவருமே டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். எனவே டி.டி.வி.யை நீக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தால், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அத்தனை அபிடவிட்களும் செல்லாதது ஆகிவிடும்.
இவற்றைத் தாண்டி, ஓ.பி.எஸ்.ஸுக்கு துணை முதல்வர் பதவி என்கிற ஒப்பந்தத்துடன் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் ஓ.பி.எஸ்.ஸை சுற்றியிருக்கும் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. ‘நீங்கள் அடுத்த முதல்வராக வரும் வாய்ப்பை எடப்பாடியுடம் ஒட்டுவதன் மூலமாக இழக்க வேண்டாம்’ என அவர்கள் தூபம் போடுகிறார்கள். இப்படியாக உச்சகட்ட மும்முனைக் குழப்பத்தில் அ.தி.மு.க. திணறுகிறது.