பாடலாசிரியர் தாமரை திரைத்துறையில் பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களுக்கு இவர் எழுதிய பாடல் மெகா ஹிட் அடித்தன. இவர்கள் இருவரது காம்போ ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தாமரையின் பாடல் வரிகள் மிக அழகாக இருக்கும். காதல், சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளிலும் பாடல் எழுதியுள்ளார். இந்தநிலையில், பாடலாசிரியர் தாமரை மீது விஜி பழனிசாமி என்பவர் ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா என்கிற ரத்தினசீலன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த விஜி பழனிசாமி என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தான், விஜியின் தகாத உறவு பற்றி தெரிந்துகொண்டதாக ரத்தினசீலன் 43 ஆடியோக்களை பதிவு செய்துவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையில், பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை, இந்த பெண்ணால்தான் தனது வாழ்வும் நாசமானதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், கவிஞர் தன்னை அச்சுறுத்தி வருவதாகவும், காழ்புணர்ச்சியால் அவதூறு பரப்புவதாகவும் விஜி பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜி, “நான் ரத்தினசீலனை பிரிந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. நான் அவரிடமிருந்து பிரிந்து வந்தபின் தான் அவர் இறந்துள்ளார். இதற்கு முழு காரணம் நான் மட்டும் இல்லை. கோபம், சண்டையில் பேசிய ஆதாரத்தை கொண்டு எனக்கு எதிராக தாமரை செயல்படுகிறார். நான் தான் இறப்புக்கு காரணம் என்றால் என்.ஓ.சி வாங்காமல், என் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம், தாமரை காழ்புணர்ச்சியால் அவதூறு பரப்புகிறார். ரத்தினசீலனுடன் 15 நாட்கள் மட்டுமே வாழ்ந்தேன். அவர் தாழ்வுமனப்பான்மையோடு இருந்து வந்தார். அவருடைய குடும்ப சூழல் காரணமாக, கடன் பிரச்சனை, அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார். ரத்தினசீலன் இறுதி சடங்கிற்கு கூட நான் செல்லவில்லை. மறுநாள் தான் அவரது குடும்பத்தினர் எனக்கு தெரிவித்தனர். தாமரை என் மீது அவதூறு பரப்புகிறார். சட்டரீதியாக நான் எதையும் சந்திக்க தயார்” என்ற அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/