மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறைக்கு எதிராக ‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய திவ்யபாரதிக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பாலியல் ரீதியாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் செல்ஃபோன் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொந்தரவு அளிப்பதாக குற்றம்சாட்டி, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, பெண்கள் எழுச்சி அமைப்பு, பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெண் அமைப்புகள் சார்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதிக்கு குறிப்பிட்ட சமூகத்தினர் பாலியல் ரீதியாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசுகின்ரனர். சமூகவலைத்தளங்களில் தகவல்கள் அனுப்புகின்றனர். ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தில் அவர்களது சமூகத்தினரை திவ்யபாரதி இழிவுபடுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிலிருந்தே அவர்கள் அந்த ஆவணப்படத்தை பார்க்காமல் பொய்யான குற்றச்சாட்டுகள், வதந்திகளை நம்பிக்கொண்டு திவ்யபாரதிக்கு மிரட்டல் அளிப்பதை அறியமுடிகிறது.
ஒரு படைப்பாளியாக அவர் ஆரோக்க்கியமான விமர்சனங்களை வரவேற்கிறார். ஆனால், பாலியல் ரீதியில் அளிக்கப்படும் துன்புறுத்தல்களால், அவருடைய உயிருக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக திவ்யபாரதி கருதுகிறார்.
பெண்கள் உரிமைகளுக்காக போராடும் எங்களைப் போன்ற அமைப்புகள் அவருக்கு அளிக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக போராட முன்வந்திருக்கிறோம். திவ்யபாரதிக்கு அனுப்பப்பட்ட தகவல்களில் சிலவற்றை எங்களால் படிக்க நேர்ந்தது. அவையெல்லாம் கவலையை அளிக்கும் வகையில் உள்ளன.
இதுகுறித்து அவர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியதுபோலவே, திவ்யபாரதி மீதான தாக்குதல்களும், அவர் உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் கருத்து சுதந்திர உரிமைகள் மீரப்படுவதையே உனர்த்துகிறது. எனவே அவருக்கு எதிரான இந்த மிரட்டலை கவனமாக எடுத்துக்கொண்டு, திவ்யபாரதிக்கு தனிப்பட்ட ரீதியில் போலீஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும். அவருக்கு மிரட்டல் விடுப்பவர்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”, என கூறப்பட்டிருந்தது.