Advertisment

யானைகளுக்கு உடற்கூறு ஆய்வு அவசியம் ஏன்? மருத்துவர் அசோகன் எக்ஸ்க்ளூசிவ்

1965ம் ஆண்டு யானைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வன உயிர் மருத்துவர் கோபாலன் முதன்முறையாக எழுதினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் பங்கு இதில் மிக அதிகம். நான் அவரிடம் ஜூனியராக சேர்ந்த பிறகு, யானைகள் இறப்பு மற்றும் உடற்கூராய்வு போன்றவை ஆவணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினோம்.

author-image
Nithya Pandian
New Update
World elephant day 2021

World elephant day 2021 : ”உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…’ - ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதையில் இருந்து.

Advertisment

World elephant day 2021

ஆதிகாலம் தொட்டே மனிதனுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் யானைகள் இன்றும் மனிதனால் அதிகம் நேசிக்கப்படும், மனிதனின் செயல்களால் அதிக சிரமத்தை சந்திக்கும் உயிரினமாக உள்ளது. சங்க இலக்கியத்தில் அதிகம் கொண்டாடப்பட்ட விலங்காக உள்ள யானைக்கு தமிழில் மட்டும் வேழம், களிறு, களபம், வாரணம், அதவை, அத்தினி, கரிணி என்று 60க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.

சர்வதேச யானைகள் தினம் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள யானைகள் எதிர்க் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (United Nations Environment Programme’s (UNEP)) கூறுகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆப்பிரிக்க யானைகள் வாழ்ந்து வந்தன. தந்தங்களுக்காக வேட்டை, வாழ்விட சுருக்கம் போன்ற காரணங்களால் இன்று 4 லட்சத்தி15 ஆயிரம் யானைகளே ஆப்பிரிக்காவில் வாழ்வதாகவும் UNEP இணையதளம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க : அறிந்த யானைகளும்; அறியப்படாத மனித இழப்புகளும்… மோதல்களுக்கு காரணம் என்ன?

World Elephant day 2021, Tamil News, உலக யானைகள் தினம்
சில மாதங்களுக்கு முன்பு, ரயில் மோதி காயம் அடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் குழுவினர்; இடம் - வாளையாறு, கோவை; புகைப்பட உதவி : கார்த்திக்

யானைகளுக்கு ஏன் பிரேத பரிசோதனை தேவை?

யானைகள் கொல்லப்படுவது தவிர்த்து பல்வேறு காரணங்களுக்காக மரணிக்கின்றன. அந்த காரணங்களை கண்டறிந்து, அது மீண்டும் ஏற்படாத வகையில் தவிர்க்க யானைகளுக்கு உடற்கூராய்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இது வருங்காலத்தில் யானைகளின் இழப்பை குறைக்க பெரும் அளவில் உதவும்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை அதிகாரியாகப் (Forest Veterinary Officer) பணியாற்றி வரும் வனவுயிர் மருத்துவர் அசோகன் யானைகளுக்கு உடற்கூராய்வு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்து கொண்டார்.

”யானைகள் மரணித்த 24 மணி நேரத்தில் அதற்கு உடற்கூராய்வு செய்தால் மட்டுமே மரணத்தின் காரணத்தை கண்டறிய முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் யானைகள் எங்கே இறந்திருக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. வன எல்லைகளில் இறந்திருக்கும் பட்சத்தில் உடனே கண்டறிந்து ஆய்வு நடத்தி முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ரோந்து பணிகளின் போது இறந்து போன யானைகளின் உடல் மிகவும் தாமதமாக கண்டறியப்பட்டால், அந்த யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளது” என்றார் வன உயிர் மருத்துவர் அசோகன்.

350க்கும் மேற்பட்ட யானைகளுக்கு உடற்கூராய்வு செய்திருக்கும் மருத்துவர் அசோகன், பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதிலும் வல்லுநராக இருக்கிறார். சத்தியமங்கலம் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, ஆசனூர் போன்ற பகுதிகளில் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு, இடர்பாடுகளில் சிக்கிக் கொண்ட யானைகளை மீட்கும் பணியிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 25 யானைகளை மிகவும் இக்கட்டான சூழலில் இருந்து அவர் மீட்டுள்ளார். சேரம்பாடியில் கடந்த டிசம்பர் மாதம் பழங்குடிப் பெண் உட்பட 3 பேரை கொன்ற ஷங்கர் யானையையும், அனைவருக்கும் நன்கு பரீட்சயமான சின்னத்தம்பி யானையையும் பிடித்த மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image
குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கும் வன உயிர் மருத்துவர் அசோகன்

”மன அழுத்தம் அல்லது மின்சாரம் தாக்கி யானைகள் இறந்திருக்கும் பட்சத்தில் யானையின் மூளை மாதிரியை சேகரிப்பது மிகவும் அவசியமானது. ஆனால் யானைகள் இறந்த பின்பு முதலில் சிதைய துவங்குவது மூளை தான். எனவே யானைகள் இறந்தவுடன் உடற்கூராய்வு செய்துவிட வேண்டும். ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்பட்டால் யானைகளுக்கு வாய் மற்றும் மூக்கில் இரத்தக் கசிவு ஏற்படும். அந்நோய் இருப்பதை உறுதி செய்யவும் 24 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார் அவர்.

யானைகள் இறப்பில் மிகவும் பொதுவாக காணப்படும் காரணங்களில் ஒன்று ஒன்று குடற்புழுக்கள். குறிப்பாக, நாடா புழுக்கள் வயிற்றில், குடல் பகுதியை கடிக்க துவக்கும் போது வலி தாங்கமல் இங்கும் அங்கும் ஓட துவங்கி, இறுதியாக இறந்துவிடும். அடிபட்டு இருக்கும் யானைகள் 2-3 நாட்களுக்கு, எழுந்து நடக்க முயற்சி செய்து , உடலில் நீர் சத்தை இழந்து இறந்துவிடும். இந்த யானைகளின் உடலை கண்டுபிடிப்பது சவாலான காரியமாக அமைகிறது. ஒரு வாரம் கழித்து அந்த யானைகளின் உடலை கண்டடையும் போது கிட்டத்தட்ட யானைகள் அழுகிய நிலையில் தான் இருக்கும். அந்த யானை பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்கத்தால் உயிரிழந்தா என்பதை மட்டுமே நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் 25 ஆண்டுகளாக யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அசோகன்.

தொடர்ந்து வயல்களுக்கு சென்று விவசாய நிலங்களில் உணவை உட்கொள்ளும் யானைகள் உடம்பில் தான் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருக்கும். நிறைய பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த விளை பொருளை உட்கொண்டால் யானைகள் ஓரிரு நாட்களில் இறந்துவிடும். Chronic poison முறையில் யானையின் உடலில் விஷம் ஏறினால் அந்த யானை மரணிக்க 20 முதல் 30 நாட்கள்ஆகும். உடல் உறுப்புக்கள் அனைத்தும் விஷத்தின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும். Acute poisoning-ல் உடனடியாக இறந்துவிடும்.

publive-image
யானைக்கு சிகிச்சை அளிக்கும் வனத்துறை குழுவினர்

குறைந்த வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகளுக்கு மரணத்தின் காரணம் தொடர்பாக அறிக்கை அளிக்க அதிக ”ரெஃப்ரன்ஸ்” ( ஆதாரங்கள் ) நீதிமன்றத்தில் சமர்பிக்க தேவை.  குறைந்த வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கிய யானை படுத்த நிலையிலேயே இருக்கும். சில நேரங்களில் தப்பிக்க முயற்சி செய்து நாய்கள் அமர்ந்திருப்பதை போன்று அமர்ந்த நிலையிலேயே மரணித்துவிடும். மூளையின் மாதிரியை ஆய்வு செய்ய போதுமான ஆராய்ச்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை. இது போன்ற ஆய்வுகள் அதிகம் ஊக்குவிக்கப்படும் பட்சத்தில் யானைகளின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

24 மணி நேரத்தில் இறந்த யானையின் உடல் கண்டறியப்பட்டால் histopathology மற்றும் toxicology சோதனைகளுக்காக இரத்தம், தனித்தனியாக மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், பெங்குடல் மற்றும் சிறுகுடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க : மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?

தமிழகத்தின் யானை டாக்டர்கள்

”1886ம் ஆண்டு முதல் 2000 வரையிலான 114 வருடங்களில் தமிழகத்தில், அரசால் பாதுகாக்கப்படும் யானைகளுக்கு 223 யானைக் குட்டிகள் பிறந்துள்ளன. அதில் 75 குட்டிகள் இறந்துள்ளது என யானைகள் குறித்து பல முக்கியத் தரவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று மேற்கோள் காட்டிய அவர், "யானை எந்தவிதமான காயங்கள் மற்றும் மோசமான சூழலில் சிக்கிக் கொண்டாலும், அதனை நிச்சயமாக காப்பாற்றிவிட இயலும். யானைகளை அதன் உடல் அசைவில் வைத்து அது பிழைத்துக் கொள்ளுமா என்று நம்மால் கண்டறிந்துவிட இயலும். அதற்கு தேவையானது எல்லாம் யானைகள் பற்றிய புரிதல்களும், இந்த வேலை மீதான ஈடுபாடும் தான். 1965ம் ஆண்டு யானைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வன உயிர் மருத்துவர் கோபாலன் முதன்முறையாக எழுதினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் பங்கு இதில் மிக அதிகம். நான் அவரிடம் ஜூனியராக சேர்ந்த பிறகு, யானைகள் இறப்பு மற்றும் உடற்கூராய்வு போன்றவை ஆவணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினோம்.

இன்று பல மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும், யானைகள் குறித்த தரவுகளை அளிக்கவும் இது பல வகையில் உதவுகிறது. இன்று யானைகளுக்காக பிரத்யோக சிகிச்சை அளிக்க 4 மருத்துவர்கள் மட்டுமே உள்ளோம். இந்தியா முழுவதும் 30 முதல் 40 மருத்துவர்கள் இருக்கலாம்.” என்று இந்த துறையில் தங்களின் சிறந்த பங்கீட்டினை அளித்த மருத்துவர்கள் குறித்தும் உரையாடினார் மருத்துவர் அசோகன்.

யானைகள் முகாமில் 2000 வரை பல்வேறு குட்டிகள் பிறந்தன இவை 2 -3 வயதில் தாயிடம் இருந்து குட்டியானைகளை பிரிப்பது மிகவும் சவாலான காரியம் இதற்கு இங்கு பிறந்த
அனைத்து குட்டிகளையும் அரவணைக்கும் ரதியால் இது மிகவும் எளிதானது. எந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை நிர்ணயம் செய்வது இந்த அனுபவம் தான்.

பலரும் வெளியே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர். அரசு பணிக்கு வரும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மிருக காட்சி சாலைகளில் பணியாற்றுகின்றனர். அனுபவமும், அர்ப்பணிப்பும் தான் ஒரு நல்ல யானை டாக்டரை உருவாக்குகிறது. இறந்து பல நாட்கள் ஆன யானையின் உடலில் அதிக நெடி கொண்ட துர்நாற்றம் வீசும். பிண பரிசோதனை முடிந்த பின் நம் உடலிலும் நாற்றம் இருக்கும். இதற்கு பயந்து கொண்டு பிரதே பரிசோதனை செய்யாமல் சென்றுவிடும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

World Elephant day 2021, Tamil News, உலக யானைகள் தினம்
சேற்றில் சிக்கி இருக்கும் யானையை மீட்கும் குழுவினர் - புகைப்பட உதவி - டாக்டர் அசோகன்

யானைகள் இறந்தால், ஒரு குறிப்பிட்ட முறையை பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைகள் தேசம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. அப்படி ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படவும் இல்லை. ஆனால் இந்த நடைமுறைகளும் யானைகள் இறந்து எத்தனை நாட்கள் ஆனது என்பதைப் பொறுத்தே அமையும். சில நேரங்களில் வெறும் எலும்புக் கூடுகளை மட்டுமே பெற முடியும். மண்டையோடு, தந்தம் மற்றும் இடுப்பெலும்பு ஆகியவற்றை வைத்து இறந்த யானையின் பாலினம் மற்றும் இறந்து எவ்வளவு காலம் ஆகிறது என்பதை மட்டுமே கண்டறிய முடியும் என்று குறிப்பிட்ட அவர் நீலகிரியில் வேட்டைக்காக கொல்லப்பட்ட யானைகளுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது குறித்தும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

வேட்டையாடப்பட்ட யானைகளுக்கு உடற்கூராய்வு

இன்றைய சூழலில் நீர் பற்றாக்குறை மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களுக்காக மட்டுமே யானைகள் உயிரிழக்கின்றன. வேட்டையாடுதல் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் 1996 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வேட்டையாடப்பட்ட யானைகளுக்கும் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில், எவ்வாறு தந்தங்கள் எவ்வாறு வெட்டப்பட்டன? அதற்கு மேற்கொள்ளப்பட்ட முறை என்ன? துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? தோட்டாக்களின் எண்ணிக்கை எத்தனை? வேட்டையாடிய நபர் தந்தத்தை வெட்டியெடுக்கும் விதத்தைக் கொண்டு இது போன்று முன்பு நடந்துள்ளதா என்பதையெல்லாம் பட்டியலிட வேண்டும். வேட்டையாடப்பட்ட பல யானைகள் ஆற்றில் கிடக்கும். அங்கேயே நாங்கள் உடற்கூராய்வினை மேற்கொண்டிருக்கின்றோம் என்றார் அசோகன்.

யானைகளுக்கு உடற்கூராய்வு போன்று சிகிச்சைகளும் மிகவும் முக்கியமானது. சில நோய்களுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம். சில நோய்களை சரியாக்க மாதங்கள் ஆகும். அதற்கான பாதுகாப்பு செலவும் அதிகரிக்கும். யானை தானே என்று விட்டுவிட்டால் நம்முடைய பல்லுயிர் பெருக்க நிலையில் இருந்து ஒரு நாள் யானைகள் காணாமல் போகும் சூழல் விரைவில் ஏற்படும் என்று எச்சரிக்கையும் செய்துள்ளார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Elephant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment